சட்ட நூல் தொகுத்த சரபோஜி!
தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னர்களில் முக்கியமானவர் இரண்டாம் சரபோஜி.இவர், கி.பி.1798ம் ஆண்டு முதல் கி. பி. 1832ம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். இவர் கலை ஆர்வலராகவும் நல்ல நிர்வாகியாகவும் இருந்தார்.ஒருநாட்டின் அரசு இயக்கம் சரியாக செயல்பட வேண்டுமென்றால், நல்ல சட்டத் தொகுப்பு இருக்க வேண்டும். இதனை உணர்ந்த இரண்டாம் சரபோஜி மன்னர், சட்டத்தொகுப்பை உருவாக்கினார். பண்டைய இந்து சட்டங்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், தம் நாட்டுக்கு உதவி செய்யக்கூடிய வகையில் சட்டத்தைத் தொகுத்தார். இவர் தொகுத்த சட்டத்திற்கு 'விவகார பிரகாசர்' என்று பெயர்.இரண்டாம் சரபோஜி காலத்தில், 6 நீதிமன்றங்கள் இயங்கிவந்தன. குற்றவியல், சட்டவியல், முத்திரித சபை, தர்மசபை, நியாயசபை, பிரதிஷ்டி சபை ஆகியவையே அவை.100 ரூபாய்க்குள் அமையும் சிறு வழக்குகள் முத்திரித சபையில் நடைபெற்றன. 100 ரூபாய்க்கு மேற்பட்ட வழக்குகள் தர்மசபையில் நடைபெற்றன. நியாய சபையில் குற்றவியல் வழக்குகள், மேல் முறையீடுகள் போன்றவை நடைபெற்றன. பிரதிஷ்டி சபை கோட்டைக்கு வெளியே (கிராம வழக்குகள்) உள்ள வழக்குகளைக் கையாண்டது. மன்றங்களுக்கு வேதத்தில் சிறந்து விளங்கிய அறிஞர்கள் தலைமை வகித்தனர். மணி.மாறன்