மண்ணைப் பொன்னாக்கிய சீக்கிய விவசாயிகள்
தண்ணீர்ப் பஞ்சத்திற்குப் பெயர்போன மாவட்டம் இராமநாதபுரம். இம்மாவட்டத்தில் அபிராமம் என்னும் சிறிய நகருக்கு அருகே உள்ளது வல்லந்தை கிராமம். காய்ந்த பூமியும் கருவேல மரங்களுமாகக் காட்சியளிக்கும் வறண்ட இப்பகுதியை, பஞ்சாப்பில் இருந்து வந்த சீக்கிய விவசாயிகள் பொன்விளையும் பூமியாக மாற்றியுள்ளனர். இராமேஸ்வரத்திற்குச் சாமிகும்பிட வந்த கல்கிதார் அறக்கட்டளையின் தலைவர் இக்பால் சிங், இப்பகுதியின் வறட்சியைக் கண்டார். இதனைக் கடின உழைப்பால்தான் மாற்ற முடியும் என அவர் நம்பினார். தனது எண்ணத்தை பஞ்சாப் திரும்பியதும், சிலரிடம் பகிர்ந்துள்ளார். இக்பால் சிங் கூறியதைக்கேட்டு, அங்கிருந்து மன்மோகன்சிங், ஹர்ஷன் சிங், சர்பஜித்சிங் மூவரும் 2007ஆம் ஆண்டு இப்பகுதிக்கு வந்தனர். கடும் வறட்சியால் காய்ந்து கிடந்த நிலத்தை, குறைந்த விலைக்கு வாங்கினர். அதில் மூன்று ஆண்டுகள் கடுமையாக உழைத்துச் சீராக்கினர். அதற்கு அகல் விவசாயப் பண்ணை என பெயரிட்டனர். 2011ஆம் ஆண்டு முதல் விவசாயம் செய்யத் தொடங்கினர். இன்று அவர்களின் உழைப்பால் செழித்து வளர்ந்துள்ளது அப்பண்ணை.”பஞ்சாப், தண்ணீர் செழிப்பான பகுதி. இந்த மாதிரி தண்ணீர் கஷ்டம் உள்ள பகுதிகளில் பயிர் செய்வது, எங்களுக்குச் சவாலாகத்தான் இருந்தது. நிலத்தைச் சரி செய்து, பெரிய கிணறு வெட்டினோம். அப்புறம் 100 பப்பாளி மரங்களை வைத்து, அதன் மகசூலை வைத்து, நிலங்களில் பிற தோட்டக்கலைப் பயிர்களைப் பயிரிட்டோம். மா, நெல்லி, கொய்யா சாகுபடி செய்தோம். கூடவே குட்டை வகைத் தென்னை மரங்களை வைத்தோம். சிறுதானியப் பயிர்கள், காய்கறிகள் என்று எங்கள் பயிர் வகைகள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. கிணற்று நீரைத் தொட்டிகளில் சேமித்து, சொட்டு நீர்ப் பாசனம் மூலம், குறைந்த தண்ணீரில் பயிர்களை விளைவித்தோம்.இயற்கை உரத்திற்காக, பசுமாடுகளை வளர்த்து, அதன் சாணத்தை பஞ்சகவ்ய உரமாகத் தயாரித்துப் பயன்படுத்துகிறோம். அதுபோலவே மண்புழு உரமும் தயாரிக்கிறோம்.எங்களுடைய இந்த வெற்றிக்கு, இப்பகுதி மக்களே காரணம். அவர்களின் துணையோடுதான் பசுமைப்பண்ணையை உருவாக்கினோம்” என்கிறார் மன்மோகன் சிங். - அன்பழகன்