போல புரைய ஒப்ப உறழ...
ஒன்றை மற்றொன்றோடு ஒப்பிட்டு, சிறப்பைக் கூறுவதுதான் உவமை. 'செல்விக்கு மான்விழி' என்ற வாக்கியத்தை எடுத்துக் கொள்வோம். செல்வியின் விழிகள், மானின் விழிகளைப் போன்று இருந்தன. அதனால் செல்வியின் விழிக்கு, மானின் விழி உவமையாகக் கூறப்பட்டது. ஒன்றை விளக்கும்போது, உவமைகூறி விளக்குவதால், எளிதில் பொருள் விளங்கும். உவமைகூறி விளக்கும் மரபு, எல்லா மொழிகளிலும் தொன்றுதொட்டு இருக்கிறது. உவமை என்பதும், உவமானம் என்பது ஒன்றே. உவமையால் விளக்கப்படும் பொருள் உவமேயம். மான் என்பது உவமை. விழி என்பது உவமேயம். இடையில் இவ்விரண்டையும் இணைப்பதற்குத் தோன்றுவதுதான், உவம உருபு. உருபு என்றால், சொல்உறுப்பு என்று பொருள். உவம உருபு சொற்கள் பற்றி, நன்னூலில் 367ம் பாடல் விளக்குகிறது. போல புரைய ஒப்ப உறழமான கடுப்ப இயைப ஏய்ப்பநேர நிகர அன்ன இன்னஎன்பவும் பிறவும் உவமத்துருபே. -இதிலுள்ள எல்லாச் சொற்களும் உவம உருபுகள்தான் என்றாலும், போல, போன்ற ஆகிய சொற்களே, உவம உருபுகளாகப் பெரிதும் பயன்படுகின்றன. வினை, பயன், மெய் (உடல் வடிவம்), நிறம் ஆகிய நான்கு நிலைமைகளில் உவமை கூறி விளக்குவது மரபாக இருந்திருக்கிறது. 'புலிபோலப் பாய்ந்தான்' என்பது, வினைக்கு உவமையாக விளக்கத் தோன்றியது. 'மழைபோன்ற ஈகை' என்பது பயனை விளக்கத் தோன்றிய உவமை. 'கொடிபோல் இடையாள்' என்பது, மெய்வடிவத்தை விளக்குகின்ற உவமை. 'கார்போன்ற குழல்' என்பது நிறத்தை விளக்குகின்ற உவமை. - மகுடேசுவரன்