உள்ளூர் செய்திகள்

எல்லோரும் லைக் செய்யும் ஒருவன்!

மார்க் ஜுக்கர்பெர்க்14.5.1984நியூயார்க், அமெரிக்கா.20 வயதில் என்ன சாதிக்க முடியும்? இந்த உலகின் நட்பு வட்டத்தையே மாற்றி அமைக்க முடியும். ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே நட்பு வளையம் ஏற்படுத்த 2004ஆம் ஆண்டு ஒரு சிறு டிஜிட்டல் உலகம் உருவானது. 'ஃபேஸ்புக்' என்கிற அந்த உலகத்தில் தற்போது, சுமார் 200 கோடி பேர் இருக்கிறார்கள். உலக மக்கள்தொகையில் நான்கில் ஒருவரை அதற்குள் குடியேற வைத்தவர் மார்க் ஜுக்கர்பெர்க்.நடுநிலைப் பள்ளியில் படிக்கும்போதே கணினி புரோகிராம் எழுதத் தொடங்கினார். அவை அத்தனையும் தகவல் தொடர்புக் கருவிகள், விளையாட்டுகள் தொடர்பான புரோகிராம்கள். சிறு வயதிலேயே செயற்கை நுண்ணறிவு சம்பந்தமாக அதிக அறிவுடன் இருந்தார். இதனால், மைக்ரோசாஃப்ட் போன்ற பெரு நிறுவனங்களின் வேலை இவரைத் தேடி வந்தது. அவரோ எல்லாவற்றையும் மறுத்துவிட்டு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்துவிட்டார். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களின் குழுப் புகைப்படங்களைக் கொண்டு ஆண்டுமலர் புத்தகம் வெளியிடும் வழக்கம் இருந்தது. அதன் பின்னணியில் நண்பர்களுக்குள் தொடர்பு ஏற்படுத்த ஃபேஸ்புக் உருவாக்கும் யோசனை அவருக்கு உதித்தது. இதே முறையை மற்ற பள்ளிகளுக்கும் பரப்ப முடிவெடுத்து, 2004இல் நண்பர் உதவியுடன் செய்து முடித்தார். மே 2007இல் ஃபேஸ்புக் இயங்குதளத்தை மார்க் அறிவிக்கும்போது இருந்த பரபரப்பு இன்றும் தொடர்கிறது. அதற்குக் காரணம் அவரது தலைமைப் பண்பு. வெற்றிகளை மட்டுமின்றி தவறுகளையும் ஏற்றுக் கொண்டு அதற்கான தீர்வுகளை வழங்கினார். 'தொழிலையும் தாண்டி உலக மக்களை இணைப்பதற்காகவே ஃபேஸ்புக்' என்கிற நோக்கமே அவரது தனித்துவத்திற்குக் காரணம்.வெறும் பொழுதுபோக்கு தகவல் பரிமாறும் இடமாக மட்டும் இல்லாமல், வர்த்தகம் செய்யும் தளமாகவும் ஃபேஸ்புக் மாறி இருப்பது மார்க்கின் தொலைநோக்குச் சிந்தனை. பல வெற்றிகள், பல சறுக்கல்கள் என எல்லாவற்றையும் கடந்து நிற்கும் மார்க் ஜுக்கர்பெர்க் நாம் எல்லோரும் 'லைக்' செய்யும் ஒருவனாக இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !