உள்ளூர் செய்திகள்

மயக்கத்தை உண்டாக்கக்கூடிய எழுத்துகள்

'அந்த அறையில் அரைவாசி நிரம்பியிருந்தது.''ஆற்றங்கரையில் கறைபடிந்த வேட்டி காய்கிறது.''பனியில் பணி செய்யாதே.''ஆனி மாதம் அடித்த ஆணி.''கழைக்கூத்தாடி தன்னுடைய கலையை நிகழ்த்திவிட்டுக்களைத்து அமர்ந்தார்.'இந்த வாசகங்களில் ஒரு சுவையான ஒற்றுமை இருக்கிறது. கவனித்தீர்களா?இவை ஒவ்வொன்றிலும் இரண்டு அல்லது மூன்று சொற்கள் கிட்டத்தட்ட ஒரேமாதிரியாக ஒலிக்கின்றன. அறை/அரை, கரை/கறை, பனி/பணி, ஆனி/ஆணி, கழை/கலை/களை ஆகிய இந்தச் சொற்களை எழுத்தில் பார்க்கும்போது, அவை முற்றிலும் வேறுபட்டவை என்று நமக்குப் புரிகிறது. அவற்றின் பொருளும் மாறுபடுவதை அறிகிறோம். ஆனால், அவற்றை யாரேனும் சொல்லக்கேட்கும்போது, அவர் சொல்வது 'அறை'யா அல்லது 'அரை'யா என்கிற மயக்கம் ஏற்படும்.ஆகவே, இவ்வகைச் சொற்களை, 'மயங்கொலிச் சொற்கள்' என்று அழைக்கிறோம். அதாவது, கிட்டத்தட்ட ஒரேமாதிரி ஒலித்து மயக்கத்தை உண்டாக்குகிற சொற்கள்.மயங்கொலிச் சொற்களை உருவாக்குபவை பெரும்பாலும் இந்த எழுத்து இணைகள்தாம்:ன, ண, நல, ள, ழர, றபொதுவாக ஒலி மயக்கம் உண்டாகக் காரணம், எழுத்துகள் பிழையாக உச்சரிக்கப்படுவதுதான். எடுத்துக்காட்டாக, ன, ண, ந ஆகிய மூன்று எழுத்துகளும் சரியானபடி உச்சரிக்கப்பட்டால், மயக்கம் ஏற்பட வாய்ப்பே இல்லை.ஆகவே, நம்முடைய பேச்சில் ஒலி மயக்கம் ஏற்படாமலிருக்க வேண்டுமென்றால், இந்த எட்டு எழுத்துகளையும் நாம் சரியாக உச்சரிக்கக் கற்கவேண்டும். மற்ற எழுத்துகளைச் சரியாக உச்சரிப்பதும் முக்கியம்தான். ஆனால் இந்த எட்டையும், அவற்றின் குடும்ப எழுத்துகளையும் உச்சரிக்கும்போது, பிழை ஏற்படவே கூடாது. ஒருவேளை ஏற்பட்டுவிட்டால், பேச்சின் பொருளே மாறிவிடும்.எடுத்துக்காட்டாக* 'வேல் முருகன்' என்றால், கையில் வேலை வைத்திருக்கும் முருகக்கடவுள். 'வேள் முருகன்' என்றால், முருகன் என்ற அரசன்* 'அறம் செய்ய விரும்பு' என்றால், நல்ல செயல்களைச் செய்ய விரும்பவேண்டும் என்னும் அறிவுரை. 'அரம் செய்ய விரும்பு' என்றால், தொழிற்சாலையில் அரம் என்கிற அறுக்கும் கருவியைச் செய்வதற்கான கட்டளை.* 'மலைச்சாரல்' என்றால் மலையின் சரிவான பக்கம். 'மழைச்சாரல்' என்றால் மழைத்துளிகள் சிதறுதல்.* 'அன்னம்' என்றால் ஒரு பறவை. 'அண்ணம்' என்றால் உள்வாயின் மேற்பகுதி.இப்படி நூற்றுக்கணக்கான எடுத்துக்காட்டுகளை அடுக்கலாம். மயங்கொலிச் சொற்களைக் கவனமாகப் பொருளுணர்ந்து பயன்படுத்தினால், இதுபோன்ற குழப்பங்களைத் தவிர்க்கலாம்.ஒலி மயக்கத்தை உண்டாக்கக்கூடிய எழுத்துகள் எட்டையும் எப்படிச் சரியாக உச்சரிப்பது?இதற்கான பயிற்சியைத் தரும் பல வாசகங்கள் தமிழில் உண்டு. எடுத்துக்காட்டாகச் சிலவற்றை இங்கே பார்க்கலாம். இவற்றுக்குப் பொருள் என்ன என்றெல்லாம் யோசித்துக் குழம்பவேண்டாம், அப்படியே மனப்பாடம் செய்து பலமுறை உச்சரித்துப் பயிற்சியெடுத்துக் கொள்ளுங்கள்.* கொல்லத்தில் வெல்லத்தைத் திருடவந்த கள்ளன் பள்ளத்தில் விழுந்து பல்லுடைந்தான்* வாழைப்பழம் கொழகொழவென அழுகிக் கீழே விழுந்தது* ஓடுற நரியில ஒரு நரி கிழநரி, கிழநரி முதுகுல ஒரு பிடி நரைமுடி* பருந்தைப் பார்த்த கருங்குயில் பரபரவென்று சிறகடித்துப் பறந்தது* அண்ணாந்து பார்த்தால் முந்நூறு காக்காய்* சென்னையில் பண்ணையில் ஒரு தென்னை- ராஜேஷ்வர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !