உள்ளூர் செய்திகள்

சிலந்தியின் பாய்ச்சல் அசரவைக்கும் ஆய்வு

ராஜ சிலந்தியின் பாய்ச்சலை விஞ்ஞானிகள் வெற்றிகரகமாக படம்பிடித்து ஆய்வு செய்துள்ளனர். மனிதர்களால் தங்கள் உடல்நீளத்தைப் போன்று, நின்ற இடத்தில் இருந்து 1.5 மடங்குதான் பாய முடியும். ஆனால், சிலந்திகள் அப்படியல்ல. அவற்றின் பாய்ச்சல்கள் வியப்புக்குரியன. 15 மில்லிமீட்டர் உடலளவு கொண்ட சிலந்தியால், 90 மில்லிமீட்டர் நீளத்துக்குப் பாய முடியும். அதாவது, உடல்நீளத்தைப்போல் 6 மடங்கு அளவு. ரோபோ பொறியியல் விஞ்ஞானிகள், இந்தச் சிலந்திகளை ஆய்வகத்தில் வைத்து ஆராய்ச்சி செய்தனர். இதுதொடர்பாக, அமெரிக்காவின் மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர் முஸ்தஃபா நபவி கூறியதாவது:ரோபோக்கள் உலகமெங்கும் உருவாக்கப்படுகின்றன. ஆனால், அவற்றால் சரிவர பாயவோ, குதிக்கவோ முடியாது. அந்தளவுக்கு தொழில்நுட்பம் வளரவில்லை. இதனால், இயற்கையின் அமைப்பை உற்றுநோக்கி, ரோபோக்களை மறு உருவாக்கம் செய்ய விரும்பினோம். கிம் என்று பெயரிடப்பட்ட ராஜ சிலந்தி (Regal Spider), நாங்கள் எதிர்பார்த்தபடி பாய்ந்தது. ஆய்வில், வியப்புக்குரிய தகவல்கள் எங்களுக்குத் தெரியவந்தன. பாயும்போது, தன் உடல் எடையைப் போன்று, 5 மடங்கு விசையை காலில் பிரயோகிக்கிறது. இதனாலேயே, நின்ற இடத்தில் இருந்து இவ்வளவு தூரம் பாய முடிகிறது. குறைவான தூரத்துக்குப் பாய ஒரு வழிமுறை, தாழ்வான உயரத்துக்கு ஒரு ஸ்டைல் என்று விதவிதமான பாய்ச்சல் உத்திகளை அது கையாண்டது. எந்தப் பாய்ச்சலுக்கு எவ்வளவு ஆற்றல் செலவிட வேண்டும், எந்த இடத்திலிருந்து பாய்ச்சலைத் தொடங்க வேண்டும் என்பதெல்லாம் அதற்குத் துல்லியமாகத் தெரிகிறது. நாங்கள் அந்தச் சிலந்தியின் உடல்அமைப்பை 3டியில் கொண்டு வந்து, அதே அளவில் ரோபோ ஒன்றைச் செய்தோம். ஆனால், சிலந்தியைப் போல் அது இயங்கவில்லை. இயற்கைத் தொழில்நுட்பத்துக்கு அருகில் கூட எங்களால் போகமுடியவில்லை. கட்டுப்பாட்டு மற்றும் ஆற்றல் தொழில்நுட்பம், இன்னும் துல்லியமாகத் தேவை. ஆய்வைத் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு முஸ்தஃபா நபவி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !