உள்ளூர் செய்திகள்

நட்சத்திர வடிவப் பழம்

கரம்போலா (Carombola)ஆங்கிலப் பெயர்கள்: ஸ்டார் ஃபுருட் (Star Fruit), பெலிம்பிங் மானிஸ் (Belimbing Manis)தாவரவியல் பெயர்: அவர்ஹோ கரம்போலா (Averrhoa Carambola)தமிழ்ப் பெயர்: தமாரத்தம் பழம்இது 'ஆக்சாலிடாசியே' (Oxalidaceae) குடும்பத்தைச் சேர்ந்த மரம். குளிர்ந்த மலைப்பகுதிகளில் செழித்து வளரும். சமவெளிப் பகுதிகளில் வளராது. மரம் 30 அடி உயரம் வரை வளரும். அதிகக் கிளைகளுடன் பசுமையாக இருக்கும். கருநீல நிறத்தில் கொத்துக்கொத்தாகப் பூக்கும். மரத்தை பூச்சிகள் தாக்காது. ஆண்டு முழுவதும் பூத்து, காய்க்கக்கூடியவை. காய், நீண்ட வடிவத்தில் பசுமை நிறத்துடன் இருக்கும். பழம், மெழுகு பூசியது போன்று, வழவழப்புடன் பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும்.நன்கு பழுத்த பழங்கள், ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். பழங்கள் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில், நட்சத்திர வடிவத்தில் இருக்கின்றன. பழம் 8 செ.மீ. நீளம் வரை இருக்கும். நார்ச்சத்து நிறைந்தது. பழத்தை நேரடியாகவும், சாறாகவும் உண்ணலாம். இனிப்பு கலந்த புளிப்புச் சுவையுடன் இருக்கும். பழத்தில் 'ஆக்சாலிக்' அமிலம் (Oxalic Acid) அதிகம் உள்ளது. வைட்டமின் சி சத்து இதில் நிறைந்துள்ளது. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.இந்த மரத்தின் தாயகம் ஜாவா. உலகம் முழுவதும் மழைக்காடுகளில் காணலாம். இந்தோனேஷியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் அதிகம் வளர்கிறது. தமிழ்நாட்டில் குற்றாலம், கொடைக்கானல், ஊட்டி, மேற்குத் தொடர்ச்சி மலைச்சாரல் ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !