உள்ளூர் செய்திகள்

கதைகள், நீதி சொல்ல வேண்டியதில்லை!

'என் ரெண்டு செல்ல மகள்களுக்கும் கதை சொல்ல ஆரம்பிச்சபோது தான், எனக்குள்ள ஒரு கதைசொல்லி இருப்பதை உணர முடிஞ்சது. என் கணவர் ஊக்குவிச்சார், இதோ, ஒவ்வொரு அரசுப் பள்ளியா போய், கதை சொல்லிக்கிட்டு வரேன்,” என்று பேச ஆரம்பித்தார் ஈரோட்டைச் சேர்ந்த வனிதாமணி. “நான் திருடன் போலீஸ், சிங்கம் மான் போன்ற கதைகளைச் சொல்றதில்லை. அதெல்லாம் மாணவர்களிடம் எதிர்மறை உணர்வுகளை ஏற்படுத்திவிடும். எல்லாமே பாசிடிவ் கதைகள் தான். அதுவும், முழு கதையும் சொல்ல மாட்டேன். பல சமயங்களில் கதையைப் பாதியில நிறுத்திவிடுவேன். மிச்சத்தை நீங்களே முடிங்கன்னு கேட்பேன். 6ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கற மாணவர்கள் வரை நான் கதை சொல்றேன். உடனே, அவங்க தங்களுடைய கற்பனை வளத்துக்கேற்ப, கதையை வளர்த்துக்கொண்டு போவாங்க. சில பேரை, அதற்கு ஏத்தாப்போல ஓவியம் வரைஞ்சு முடிக்கச் சொல்வேன். முதல்ல என் வீட்டுக்கே இரண்டு, மூன்று பிள்ளைகள் வருவாங்க. அவங்களுக்கு கதை சொல்வேன். அப்புறமா தான் அரசுப் பள்ளிகளுக்குப் போனேன். அவங்க அவ்வளவு ஆர்வம் காண்பிச்சாங்க. நான் அவங்களுக்கு அட்வைஸ் பண்றதில்லை. ஒரு கதை சொல்லி முடிச்சதும், 'இதனால் பெறப்படும் நீதி யாதெனில்' என்று கேட்பதில்லை. மதிப்பீடுகளை, மாணவர்களே புரிஞ்சுக்கட்டும். அல்லது அதைக் கதையா மட்டுமே பார்க்கட்டுமே. எல்லாத்துக்கும் ஒரு நீதி இருக்கணுமா என்ன?கதைகள் சும்மா வானத்தில் இருந்து வருவதில்லை. அவை எழுதப்படுகின்றன. நான் கதை சொல்வதன் மூலமாக, புத்தகங்களை அறிமுகப்படுத்தறேன். புத்தக வாசிப்புதான் என்னை இத்தனை தூரம் வளர்த்தது. என்னோட அம்மாகிட்டே இருந்து புத்தக வாசிப்பு பழக்கம் எனக்கு வந்தது. இப்போ யோசிச்சுப் பார்த்தா, வாழ்க்கை முழுவதும் நம்மோட கூட வரப்போவது புத்தகங்களும் அதன் அனுபவங்களும் மட்டும் தான்னு தோணுது. நம்மோட இருக்கற பல உறவினர்கள் மறைஞ்சு போகலாம். ஆனால், கடைசிவரை தொடரப் போவது புத்தகங்கள் தான்.அத்தகைய புத்தகங்களோட ஓர் உறவை மாணவர்களுக்கு ஏற்படுத்தணும்னு நினைக்கிறேன். அவர்களுக்கான நிரந்தரத் தோழன் புத்தகங்கள்தான்னு மாணவர்களுக்குப் புரிஞ்சா போதும். அவர்களுக்கு தன்னாலேயே வாசிப்புப் பழக்கம் ஏற்பட்டுவிடும்.இத்தனை நாளா, பிள்ளைகளுக்குத்தான் கதைகள் சொல்லிக்கிட்டிருந்தேன். இனிமேல் பெற்றோர்களுக்குச் சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது. என் வீட்டில் இருக்கும் 'பட்டாம்பூச்சி' நூலகத்துக்கு வர்றவங்களில் பெரும்பாலோர் பிள்ளைகளைப் பத்திய அதீத எதிர்பார்ப்போட, பயத்தோட வராங்க. அவங்களை ஆசுவாசப்படுத்தவும், வாழ்க்கையை வேறு மாதிரி பார்க்கலாமேன்னு சொல்லிக் கொடுக்கவும் கதை சொல்லணும்னு நினைக்கறேன். கதை என்பது பிஞ்சு மனசுகளோடு நான் நடத்தும் உரையாடல். அது பிள்ளைகளை மேம்படுத்த, மேம்படுத்த, நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.”


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !