உள்ளூர் செய்திகள்

தேசத்தின் கதைகள்: வெற்றிச் சிற்பம்

ராஜேந்திர சோழனுக்கு நான்கு மகன்கள். அவர்களில் மூத்த மகன் பெயர் ராஜாதிராஜன். ராஜேந்திரன் மன்னராக இருந்தபோதே, இளவரசனாகப் பல போர்களுக்குச் சென்றவர். ராஜேந்திர சோழன் இறப்பதற்கு ஓர் ஆண்டிற்கு முன், பொது யுகம் 1043 இல் சோழ நாட்டிற்கு முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார் ராஜாதிராஜன்.இவர், மேலைச் சாளுக்கியர்களுடன் நடத்திய நான்கு போர்கள் மிகவும் முக்கியமானவை. அதில் ஒன்று பொ.யு. 1048இல் கல்யாணியில் நடந்தது. சாளுக்கிய மன்னர் முதலாம் சோமேஸ்வரன் (ஆகவமல்லன்) போரைத் தவிர்க்க, மூன்று பேரைச் சமாதானத் தூதுவர்களாக அனுப்பினார். ஆனால், சோழர் படை, தூதுவர்களில் ஒருவருக்குப் பெண் வேடம் புனைந்தது; ஒருவருக்கு மொட்டை அடித்தது. முதன்மைத் தூதுவனை ஒன்றும் செய்யாமல், சோமேஸ்வரனிடம் திருப்பி அனுப்பி வைத்தது. பின்னர் போர்க்களத்தில் சந்தித்தார்கள் ராஜாதிராஜனும், சோமேஸ்வரனும்.சாளுக்கியரின் கல்யாணி நகர், சோழர் படையால் பெரும் தாக்குதலுக்கு உள்ளானது. போரில் தோல்வியடைவோம் என்று கருதிய சோமேஸ்வரன், அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். நகரைக் கைப்பற்றிய ராஜாதிராஜன், அங்கேயே வீராபிஷேகம் செய்துகொண்டு 'விஜய ராஜேந்திரன்' என்ற பட்டப் பெயரைச் சூட்டிக்கொண்டார். கல்யாணி நகரில் இருந்தஒரு துவாரபாலகர் சிலையை, வெற்றியின் நினைவாகக் கொண்டு வந்தார் ராஜாதிராஜன். அந்தச் சிலை இரண்டாம் ராஜராஜன் கட்டிய, தாராசுரம் கோயிலில் வைக்கப்பட்டிருந்தது. தற்போது தஞ்சாவூர் கலைக்கூடத்தில் உள்ளது.சிலையின் கீழ் உள்ள எழுத்துப் பொறிப்புகளில், ராஜாதிராஜன் கல்யாணியை வென்று வீராபிஷேகம் செய்து கொண்ட தகவல் உள்ளது. இவர் பொ.யு.1044 முதல் 1054 வரை சோழ நாட்டின் அரசராக இருந்தார்.ராஜாதிராஜன் வெற்றி பெருமிதத்துடன் கவர்ந்து வந்த இந்தச் சிலை, நூற்றாண்டுகளைத் தாண்டியும் அவரின் வீரத்தை, பறைச்சாற்றிக் கொண்டிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !