உள்ளூர் செய்திகள்

பக்தி இலக்கியம் வளர்த்த சோழர்கள்

பத்தாம் நூற்றாண்டுக்கு முன்புவரை தமிழகத்தில், கோவில்கள் சுண்ணாம்புச் சாந்தினாலும் சுட்ட செங்கற்களாலும் கட்டப்பட்டன. சோழ மன்னர்கள் தலையெடுத்த காலத்திற்குப் பிறகுதான், கோவில்கள் யாவும் கற்றளிகளாக மாற்றப்பட்டன. கோவில்களின் அனைத்துக் கட்டுமானங்களையும் கற்களைக்கொண்டு கட்டுவதுதான் கற்றளி ஆகும். அவ்வாறு கட்டப்பட்டதால்தான் அக்கோவில்கள் பல நூற்றாண்டுகளைக் கடந்து, இன்றும் பழைமைக்கும் வரலாற்றுக்கும் சான்றாக விளங்குகின்றன. சோழர் காலத்தில் கோவில்கள் கட்டுவது என்பது ஓர் இயக்கமாகவே நடந்தது. அரசர்களும் அரச குடும்பத்தினரும் கோவில் திருப்பணிகளில் தங்களை மனமுவந்து ஈடுபடுத்திக்கொண்டனர். அரசுப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவுக்கு கோவில்களுக்குப் பங்களிப்பு செய்தனர். குடிமக்களும் கோவில் காரியங்களில் ஈடுபட்டனர். ஒவ்வோர் ஊரிலும் சைவ சமயக் கோவில்கள் கட்டப்பட்டன. இராஜராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோவிலும், இராஜேந்திர சோழன் கட்டிய கங்கைகொண்ட சோழீச்சுவரமும், சோழர்காலக் கோவில் கட்டுமானங்களுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகள். சோழர்களின் காலத்தில் அவர்களுடைய ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான கோவில்கள் கட்டப்பட்டன. சோழ மன்னர்கள் சைவ சமயத்தின்மீது ஆழ்ந்த பக்திகொண்டிருந்தனர். கோவில்களில் இடையறாது வழிபாடுகளும் பூசைகளும் தொடர்ந்து நிகழவேண்டும் என்பதற்காக, ஏராளமான அளவு நிலம் தானமாக வழங்கப்பட்டது. கோவில்களில் இறைவனுக்கு அணிவிக்க, நகைகள் தானமாக வழங்கப்பட்டன. கோவில் விழாக்களில் இசைக்கவும் நடனமாடவும் கலைத் தொழில் புரிவோர் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு நூறு கலன் நெல் விளையக்கூடிய அளவுக்கு வேளாண் நிலம் அளிக்கப்பட்டது.சோழர்கள் போரில் வென்ற இடங்களிலும், காவிரிக்கரையோரங்களிலும் எண்ணற்ற கோவில்களைக் கட்டினர். மன்னர்களும் குடிமக்களும் ஆலயம் கட்டுவதிலும், அவற்றுக்குத் திருப்பணி செய்வதிலும், ஒருசேர ஈடுபட்டு சமயத் தொண்டர்களாய் விளங்கினர். அதனால் நாடெங்கும் பக்தி மணம் கமழ்ந்தது. சோழ மன்னர்களின் இத்தகைய நிலைபாட்டினால், பக்தி இலக்கியம் பெருகியது. பக்தி இலக்கியங்களால் தமிழ் தழைத்தோங்கியது. பின்னர் வந்த வீரமாமுனிவர் போன்ற வெளிநாட்டவரும் இதை பின்பற்றி இலக்கியம் படைத்தனர்.- தமிழ்மலை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !