உள்ளூர் செய்திகள்

வண்ண அதிசயம் வானவில்!

மழைக்காலங்களில் வானத்தில் வண்ணமாய்த் தோன்றுகிற வானவில்லைப் பார்த்து ரசித்திருப்போம். பார்த்தவுடன் நம்மைக் கவரும் அழகான வானவில் தோன்ற, மழை மட்டுமே காரணம் இல்லை. பனி மூட்டம், காற்றில் மிதக்கும் கண்ணுக்குப் புலப்படாத தூசு, காற்றில் நிறைந்திருக்கும் நீர்த்துளிகள் இவையும் முக்கியக் காரணம்! மழைக்காலத்தில் மேகங்களில் உள்ள நீர்த்துளிகளில் சூரிய ஒளி ஊடுருவும். அந்த ஒளி சிதறலடைந்து, நீர்த்துளிகளின் பின்புறமாக எதிரொலிப்பதால் வானவில் தோன்றுகிறது. இதை 'நிறப்பிரிகை' விளைவு என்றும் சொல்கிறோம். நமது கண்களுக்குத் தெரிவது போல வானவில் உண்மையில் அரை வட்டமாக இருக்காது. முழு வட்ட வடிவில்தான் வானவில் தோன்றும். வளி மண்டலத்தின் மேற்பகுதியில் இருக்கும் அரை வட்டத்தை மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது. குறிப்பிட்ட சில கோணங்களிலிருந்து மட்டுமே வானவில்லை காணமுடியும். அதனால்தான் நாம் பார்க்கிற வானவில்லை, வேறு ஊரில் இருக்கிற நண்பர்கள் பார்க்க முடிவதில்லை. ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய ஏழு நிறங்களை வானவில் எதிரொலிக்கிறது. வானவில் வெளிப்படுத்துகிற வண்ணங்களைச் சுருக்கமாக 'விப்கியார்' 'VIBGYOR' எனக் குறிப்பிடுகிறோம். Violet, Indigo, Blue, Green, Yellow, Orange, Red என்பதன் சுருக்கமே இது. வானவில்லில் இரண்டு வகை உண்டு. முதல் வகையில் வெளிப்பக்கம் சிவப்பு நிறமும், உள்பக்கம் ஊதா நிறமும் இருக்கும். இரண்டாவதில், வெளிப்பக்கம் ஊதாவும், உள்பக்கம் சிவப்பும் காணப்படும். கானல் நீரைப்போல வானவில்லும் ஒளிச்சிதறல் மூலம் உருவாகும் ஒரு பிம்பம். பொதுவாக காலை, மாலை நேரங்களில் வானவில் தோன்றுகிறது. வானவில் சூரியனுக்கு எதிர்த் திசையில் தோன்றும். வானத்தில் இருந்து பார்க்கும்போது வானவில் வட்ட வடிவில் தெரியும். பல வண்ணங்களில் தோன்றும் அழகிய வானவில்லைப் பார்த்து பயப்படுகிறவர்கள் கூட இருக்கிறார்கள். இப்படி வானவில்லைப் பார்த்து அச்சம் கொள்வதற்கு 'இரிடோபோபியா' (Iridophobia) என்று பெயர்.நீங்களே செய்யலாம்! - வானவில்லை வீட்டுக்குள் வர வைப்போமா?இயற்கை உருவாக்கிக் காட்டுகிற அழகான வானவில்லை நீங்களே கூட உருவாக்கலாம்! அது எப்படி?! ஒரு எளிமையான சோதனை மூலம் வானவில்லை உருவாக்கிக் காட்டி, உங்கள் நண்பர்களை அசத்தலாம். இதற்கு கண்ணாடி டம்ளர், வெள்ளைத்தாள் ஆகிய இரண்டு பொருட்கள் இருந்தால் போதும். சரி, இந்தச் சோதனையை எப்படிச் செய்யலாம் என்று பார்ப்போம்.1. முதலில் கண்ணாடி டம்ளரில் முக்கால் அளவிற்கு தண்ணீரை நிரப்புங்கள்.2. ஜன்னல் அருகில் உள்ள மேசையில், சூரிய ஒளி கண்ணாடி டம்ளரில் நன்கு படும்படியாக வைத்து விடுங்கள்.3. டம்ளருக்கு எதிரில் வெள்ளைத்தாளை வைத்து விடுங்கள்.4. இப்போது, சூரிய ஒளி கண்ணாடி டம்ளரில் உள்ள நீரில் பட்டு அருகில் உள்ள வெள்ளைத்தாளில் வானவில் வண்ணச்சிதறலாய்த் தோன்றுவதை நீங்கள் பார்க்கலாம்.அப்புறமென்ன! வானவில்லை நண்பர்கள், தம்பி, தங்கைகளிடம் காட்டி மகிழுங்கள்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !