உள்ளூர் செய்திகள்

மறுத்தல் நல்ல பண்பு

உலகத்திலேயே சொல்வதற்கு மிகவும் கடினமான சொற்கள் எவை, தெரியுமா?உடனே அகராதியைத் திறந்து நீளமான சொற்களைத் தேடவேண்டாம். அந்த நீளமான சொற்களைக்கூடக் கொஞ்சம் முயற்சி செய்தால் எளிமையாகச் சொல்லிவிடலாம். ஆனால், சில சிறிய சொற்களைச் சொல்வது பலருக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக: வேண்டாம், முடியாது, இல்லை.இவற்றைச் சொல்வதில் என்ன பெரிய சிரமம் என்று யோசிக்கிறீர்களா? ஒரு சின்ன எடுத்துக்காட்டுடன் பார்த்தால் புரியும்.நான்கு நண்பர்கள் பள்ளி முடிந்து திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். தெருவோரத்தில் ஒரு கடை. அங்கே சூடாக போண்டா தயாராகிக் கொண்டிருக்கிறது.அதைப் பார்த்ததும், அவர்களில் ஒருவனுக்கு எச்சில் ஊறுகிறது. 'வாடா, போண்டா சாப்பிடலாம்' என்று பிறரை அழைக்கிறான்.மற்ற மூவரில் இரண்டுபேர் உடனே சம்மதித்து விடுகிறார்கள். ஆனால், ஒருவனுக்கு மட்டும் அங்கே சாப்பிட விருப்பமில்லை, தயங்குகிறான்.காரணம், அந்தக் கடை சுகாதாரமற்ற விதத்தில் அமைந்திருக்கிறது. பக்கத்திலேயே சாக்கடை இருப்பதால், போண்டாக்களை ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கின்றன. அதைச் சாப்பிட்டால் என்ன பிரச்னை வருமோ!அவனுடைய நண்பர்களோ இதை கவனத்தில் கொள்ளவில்லை. போண்டா ஆசையில் கடையை நோக்கி நடக்கிறார்கள்.இவன் தயங்குகிறான். அங்கேயே நிற்கிறான். 'வாடா' என்று மற்றவர்கள் அவனைப் பிடித்து இழுக்கிறார்கள். அவர்களிடம் சொன்னால் தன் கருத்து எடுபடுமா என்ற தயக்கத்தில் மறுப்புச் சொல்லாமல், அவர்களோடு சென்று, ஈ மொய்க்கும் போண்டாவைச் சாப்பிடுகிறான்.ஆக, சுகாதாரமற்றமுறையில் தயாரிக்கப்பட்ட உணவுப்பண்டம் என்று தெரிந்தும், அவன் அதைச் சாப்பிடுகிறான் என்றால் என்ன காரணம்? 'எனக்கு வேண்டாம்' என்று சொல்லத் தயங்குவதுதானே? அவை எளிய சொற்களாக இருந்தும், சரியான நேரத்தில் சொல்லவில்லையே!இப்படித் தவறு என்று தெரிந்த விஷயங்களைக்கூட வெளிப்படையாக மறுக்கத் தயங்குவதாலேயே, பலர் தவறான பழக்கங்களில் சென்று விழுந்து விடுகிறார்கள்; சிறுவர்கள் மட்டுமல்ல, பெரியவர்களிலும் பலர் பிறர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு பின்பற்றுகிறார்கள்; பிறகு வருத்தத்துடனும் மனநிறைவின்றியும் வாழ்கிறார்கள்.அதுபோன்ற சூழ்நிலைகளில், நாம் 'மறுத்தல் திறனை'க் கற்றுக்கொண்டு பின்பற்றலாம்:எல்லாவற்றையும் மறுக்கவேண்டியதில்லை; நாமே சிந்தித்து, தவறு என்று உணர்கிறவற்றைத்தான் மறுக்கப் போகிறோம்அப்படி மறுத்தால் பிறர் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணம் வேண்டாம்; நம்முடைய மறுப்பு நமக்குமட்டுமல்ல, பிறருக்கும் பயன்படக்கூடும், அவர்களையும் திருத்தக்கூடும்.மறுக்கும்போது, தெளிவாகவும் முழுமையாகவும் மறுக்க வேண்டும்; இதுவா அதுவா என்கிற குழப்பம் கூடாது.தேவைப்பட்டால், ஏன் மறுக்கிறோம் என்பதற்கான காரணங்களையும் தெளிவாக எடுத்துரைக்கவேண்டும்நம்முடைய மறுப்பைப் பிறர் அலட்சியப்படுத்தினாலோ, மேலும் தீவிரமாக வற்புறுத்தினாலோ மயங்கிவிடக்கூடாது; மறுப்பை அழுத்தமாக மீண்டும் முன்வைக்க வேண்டும்ஒருவேளை, நாம் மறுக்கிற விஷயம் உண்மையில் நல்லதுதான் என்று நாமே சிந்தித்து ஏற்றுக்கொண்டால், அப்போது மறுப்பை விலக்கிக் கொள்ளலாம்; மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக மாறக்கூடாது.- என். சொக்கன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !