ஹமுராபி இயற்றிய சட்டம்
மத்தியக் கிழக்கு ஆசியாவில், யூப்ரட்டிஸ் (Euphrates) ஆற்றுக்கும், டைக்ரிஸ் (Tigris) ஆற்றுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பில் தற்போது ஈராக் அமைந்திருக்கிறது. ஏறத்தாழ 4,000 வருடங்களுக்கு முன்னர் இந்தப் பிரதேசத்தில் பாபிலோனியா என்ற தேசம் இருந்தது.பாபிலோனியாவின் ஆறாவது அரசர் ஹமுராபி (Hammurabi). கி.மு 1792ஆம் ஆண்டு முதல் கி.மு. 1750ஆம் ஆண்டுவரை ஆட்சி செய்தார். தான் ஆட்சி செய்த நாற்பத்து இரண்டு வருடங்களில் ஹமுராபி, பக்கத்தில் இருக்கும் பிரதேசங்களைக் கைப்பற்றி, தன் தேசத்துடன் இணைத்து வந்தார். பல்வேறு பழக்க வழக்கங்கள் கொண்ட வெவ்வேறு பிரதேச மக்களை, ஒரே ஆட்சிக்கு உட்படுத்துவது சாதாரண காரியம் அல்ல. அதைச் செய்வதற்கு ஹமுராபி, தனது தேசம் முழுவதற்குமான முறைப்படுத்தப்பட்ட சட்டத்தை உருவாக்கினார். இதன் மூலம் அவரால் ஒன்றுபட்ட ஒரு பேரரசை நிர்வகிக்க முடிந்தது. எழுத்துப் பூர்வமாக இருக்கும் சட்டங்களில், நமக்குக் கிடைத்திருக்கும் மிகப் பழமையான சட்டத் தொகுப்பு இதுதான்!பாபிலோனியர்கள் 'ஷம்மாஷ்' (Shammash) எனும் சூரியக்கடவுளை நீதிக்கடவுளாக வழிபட்டார்கள். 'சிப்பரா' (Sippara) எனப்படும் நகரில் இந்தக் கடவுளுக்கு ஒரு கோவில் இருந்தது. அந்தக் கோவிலில் 8 அடி உயரம், 7 அடி சுற்றளவில் ஒரு பெரிய நடுகல்லை நிறுவி, அதில் மொத்தம் 282 சட்டங்களைச் செதுக்கினார் ஹமுராபி. குடும்பம், அடிமை முறை, விவசாயம், வணிகம், நீதி வழங்கும் முறை போன்ற விஷயங்களை அந்தத் தொகுப்பு உள்ளடக்கி இருந்தது. அக்காடியன் (Akkadian) என்ற மொழியில் எழுதப்பட்டது இந்தத் தொகுப்பு.இந்தக் கல்லின் மேல்பகுதியில், ஆசனத்தில் அமர்ந்த நிலையில் சூரியக்கடவுள் ஷம்மாஷ், ஹமுராபி மன்னருக்கு சட்டத் தொகுப்பை உபதேசிப்பது போன்ற சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்பத்தை அடுத்து எழுத்துக்கள் தொடர்கின்றன.ஹமுராபியின் இந்த சட்டத் தொகுப்பு, தற்போது பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் உள்ள லூவர் (Louvre) அருங்காட்சியகத்தில் உள்ளது.