உள்ளூர் செய்திகள்

நான் யார்?

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆண்கள் மட்டுமே இசை மேடைகளில் பாட முடியும் என்ற நிலை இருந்தது. அந்த நடைமுறையை இசைத் திறமையால் மாற்றி அமைத்த பெண்களான எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.எல்.வசந்தகுமாரி வரிசையில் நானும் உண்டு. என்னுடைய இயற்பெயர் அலமேலு. செல்லமாக 'பட்டா' என அழைப்பார்கள். காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் என்கிற கிராமத்தில் பிறந்தேன். தந்தை கிருஷ்ணசாமி தீட்சிதர், தாய் ராஜம்மாள். இருவருமே சங்கீதத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்கள். அன்றைய கால வழக்கப்படி பாட்டு, நடனம் கற்க பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. அப்படி இருந்த காலத்தில் 1932 எழும்பூர் மகளிர் மன்றத்தில் தொடங்கியது எனது இசைப் பயணம். தெலுங்கு கீர்த்தனைகள் கேட்டுக் கொண்டிருந்த சங்கீத மேடைகளில், பாரதியார் பாடல் தொடங்கி, தேவாரம், திருவாசகம், திருவெம்பாவை போன்ற தமிழ் இசைப் பாடல்களைப் பாடினேன். 'நாம் இருவர்' திரைப்படத்தில் நான் பாடிய 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே' பாடலை இந்தியா சுதந்திரம் பெற்ற அந்த நள்ளிரவு நேரத்தில் மக்கள் பாடி மகிழ்ந்தார்கள். அந்தப் பாடல் ஒலிக்கும் போதெல்லாம் பாரதியாருடன் சேர்ந்து, நானும் நினைவில் வருவேன். பத்ம பூஷண், பத்ம விபூஷண், சங்கீத கலாநிதி, சங்கீத நாடக அகாடமி விருது போன்ற பல்வேறு கௌரவங்கள் என்னைத் தேடி வந்தன. என் உடன்பிறந்த சகோதரர்களான டி.கே.ரங்கநாதன், டி.கே.நாகராஜன், டி.கே.ஜெயராமன் ஆகியோரும் சிறந்த பாடகர்கள்தான். தற்போது பின்னணிப் பாடகியாகவும் கர்நாடக இசைக் கலைஞராகவும் இருக்கும் நித்ய ஸ்ரீ என்னுடைய பேத்திதான்!விடை: டி.கே. பட்டம்மாள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !