ஏன் உருகுகிறது... ஏன் எரிகிறது?
ஒரு பிளாஸ்டிக் பொருளை எரியும் நெருப்பில் காட்டுங்கள். என்ன ஆகிறது? பிளாஸ்டிக் உருகி நெருப்பில் வழிவதைக் காண்பீர்கள். அடுத்ததாக ஒரு மரக்கட்டையை நெருப்பில் காட்டுங்கள். இப்போது என்ன நடக்கிறது? மரக்கட்டை பற்றி எரிவதைப் பார்க்கலாம். நெருப்பில் காட்டப்படுகிற பிளாஸ்டிக் ஏன் உருகி வழிகிறது? மரம் ஏன் உருகி வழியாமல் எரிகிறது? ஒவ்வொரு பொருளும் ஒரு குறிப்பிட்ட மூலக்கூறு அமைப்பைக் (Molecular Structure) கொண்டுள்ளது. இந்த அமைப்பில், மூலக்கூறுகள் அல்லது அணுக்கள் எளிய விசையினால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. ஒரு பொருள் உருக வேண்டுமெனில், அதன் உருகுநிலை அளவுக்கு சூடுபடுத்தப்பட வேண்டும். பொருளைச் சூடுபடுத்துவதன் மூலம் அப்பொருளின் மூலக்கூறுகளை இணைத்து வைத்திருக்கும் எளிய விசை முறிக்கப்படுகிறது. அதாவது, வெப்பநிலை அதிகமாவதால் மூலக்கூறுகள் ஆற்றல்பெற்று தம்மை இணைத்து வைத்திருக்கும் அமைப்பை அழித்துவிடுகின்றன. பிளாஸ்டிக் சூட்டில் உருக இதுவே காரணம். ஆனால், மரக்கட்டை போன்ற பொருள்கள் உருகுநிலை அளவை அடைவதற்கு முன்பே காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் கலந்து எரிந்துவிடுகின்றன. எனவே மரம் உருகுவதில்லை.