உள்ளூர் செய்திகள்

தாகத்தில் இறக்கும் வன விலங்குகள்!

ஜிம்பாப்வே நாட்டில் வாழும் நூற்றுக்கணக்கான யானைகளும் சிங்கங்களும், புதிய இடத்திற்கு மாற்றப்படவிருக்கின்றன. வறட்சியான இடத்திலிருந்து, பாதுகாப்பான இடத்திற்கு இவை விரைவில் மாற்றப்பட இருக்கின்றன என்கிற சமீபத்திய செய்தி, பலரையும் அதிர வைத்திருக்கிறது. அந்த நாட்டின் வனவிலங்குப் பாதுகாப்பு அமைப்பு இதைச் செய்யப்போகிறது.ஜிம்பாப்வேயின் புகழ்பெற்ற வனவிலங்குப் பாதுகாப்பு மையங்களான 'மனா பூல்ஸ்' (Mana pools) தேசியப் பூங்கா, மற்றும் ஹ்வாங்கே தேசியப் பூங்கா போன்றவற்றில் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. இதனால், கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 200-க்கும் அதிகமான யானைகள் இறந்துள்ளன.பெரிய யானை ஒன்று கிணற்றில் தவறி விழுந்தது. பின்னர், அந்தக் கிராம மக்கள், அந்த யானையைக் காப்பாற்றி நீரும், உணவும் கொடுத்துத் தேற்றி காட்டுப்பகுதியில் சேர்த்தார்கள். இப்படி காட்டு விலங்குகள் தண்ணீருக்காகப் பரிதவித்து அலைந்து ஆபத்தில் மாட்டிக்கொள்வதும், கிராம மக்கள் தங்களால் முடிந்த அளவிற்கு அவற்றைக் காப்பாற்றுவதும் அங்கே தொடர்கதை.நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஜிம்பாப்வே நாட்டின் வனஉயிர் பாதுகாப்பு அமைப்பு, 600 யானைகள், சிங்கக் கூட்டங்கள், ஓநாய்கள், காட்டெருமைகள், நாற்பது ஒட்டகச்சிவிங்கிகள், ஆயிரத்திற்கும் அதிகமான இம்பாலா வகை மான்கள் போன்றவற்றை வறட்சியில்லாத பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த ஆண்டும் ஜிம்பாவே நாட்டில் எதிர்பார்த்த அளவு மழைப்பொழிவு இல்லை. இதனால் ஏற்படும் வறட்சி காரணமாக இன்னும் அதிக அளவு யானைகள் இறக்க நேரிடும் என்கிறார்கள் காட்டுயிர் ஆர்வலர்கள். மேய்ச்சல் நிலங்களின் அழிவு மற்றும் போதிய மழைப் பொழிவு இல்லாமை போன்றவையே இதற்கான முக்கிய காரணங்கள். ஜிம்பாப்வே நாட்டில் ஏற்பட்டிருக்கும் வறட்சி, இந்த மனிதர்களையும் விட்டுவைக்கவில்லை. இந்த நாட்டின் கிராமப்புறங்களில் வாழும் சுமார் 50 லட்சம் மக்கள் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.-- எலீசா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !