உள்ளூர் செய்திகள்

சொன்னது பலிக்குமா?!

நாஸ்டர்டாமஸ் நினைவு நாள் ஜூலை 2(14.12.1503 - 2.7.1566)கிளி ஜோசியம், எலி ஜோசியம், கைரேகை ஜோசியம், ஆக்டோபஸ் ஜோசியம் என்று ஆரம்பித்து கம்ப்யூட்டர் ஜோசியம்வரை கடை விரிப்பதைப் பார்த்துவிட்டோம். எதிர்காலம் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் இல்லாதவர்கள் யார்? அப்படித்தான் இங்கே ஒரு ஜோதிடர் நம் ஆர்வங்களைத் தூண்டுகிறார். அவர், 500 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர். தான் வாழ்ந்த காலத்துக்கு, 1500 வருடங்களுக்குப் பின் என்ன நடக்கப்போகிறது என்பதைக் கணித்துச் சொன்னதாக நம்பப்படுபவர்! அவர்தான், மைக்கேல் டி நாஸ்டர்டாமஸ்!பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இவர் இலக்கணம், பேச்சுத் திறன், தர்க்கம், கணிதம், இசை, ஜோதிடக்கலை ஆகியவற்றை இளமையிலேயே கற்றுத் தேர்ந்தார். தன் கணிப்புகளின் மூலமாக, கி.பி. 3797 வரை உலகில் என்ன நடக்கப் போகிறது என்பதைக் கூறியுள்ளார். வழக்கமான ஜோதிட முறைகளுக்கு மாறான தனது கணிப்புகளை, குழப்பமான கவிதை வடிவில் எழுதி இருக்கிறார். இவரது கணிப்புகள் குழப்பமாகவும் சர்ச்சையாகவும் இருந்தாலும் அதில் பல கணிப்புகள் பலித்துள்ளன என்று ஒரு கூட்டமே நம்புகிறது. லண்டனின் மாபெரும் தீ விபத்து, கென்னடி சகோதரர்களின் படுகொலை, ஹிட்லரின் எழுச்சி, நெப்போலியனின் வீழ்ச்சி, அமெரிக்க அதிபராக ஒபாமா வருவது, ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டுப் பேரழிவு, அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல், உலகின் பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட இவரின் கணிப்புகள் பல, வரலாற்றுச் சம்பவங்களுடன் ஒத்துப் போவதாக அவர்கள் சொல்கிறார்கள். அது மட்டுமல்ல! “அதி பயங்கரமான வானிலை மாற்றங்களை 21ஆம் நூற்றாண்டில் உலகம் சந்திக்கும்; இயற்கைப் பேரிடர்கள், பேரழிவுகள், கடல் கொந்தளிப்புகள் அதிக அளவில் இருக்கும்” என்றெல்லாம் கணித்து வைத்திருக்கிறார். இப்போது இருக்கும் பருவநிலை மாற்றங்களைப் பார்க்கும்போது இது பலித்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுவதில் ஆச்சரியமில்லை!* 'சீனாவும் இந்தியாவும் 2030ஆம் ஆண்டில், உலகின் வல்லரசு நாடுகளாகத் திகழும்'.* 'மருத்துவத்தில், 2050ஆம் ஆண்டில் பெரும் புரட்சி ஏற்படும்.' * 'மனிதனின் எல்லா உறுப்புகளையும் விஞ்ஞானத்தில் செயற்கையாக உருவாக்கி விடுவார்கள்!' - இவை எல்லாம் நாஸ்டர்டாமஸின் கணிப்புகள்.* எல்லாவற்றிற்கும் மேலாக, 'கி.பி. 3797ல் உலகம் அழியும்' என்றும் சொல்லியிருக்கிறார். இவையெல்லாம் நடக்குமா என்ன? நாஸ்டர்டாமஸை நம்பலாமா, கூடாதா? ஆனால், படிப்பதற்குச் சுவையாக இருக்கிறது! * கணிப்புகள் பற்றிய 'லெஸ் ப்ரபெடிஸ்' (Les Propheties) என்ற முக்கியமான நூலின் முதல் பதிப்பு 1555ல் வெளியானது. இதில், 353 செய்யுள்கள் இருக்கின்றன.* அதுபோல, எதிர்காலக் கணிப்புகளை 'செஞ்சுரிஸ்' என்னும் புகழ்பெற்ற நூலிலும் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !