வெற்றி வீரர்கள்!
உலக நாடுகளில் பிரபல போர் வீரர்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.ஐரோப்பிய வீரர்கள்: இவர்களில் சிறப்பாகச் செயல்படுபவர்களை வீரத்திருமகன் (நைட்ஹூட் - Knighthood) என்று அழைத்தார்கள். போருக்காகவே பழக்கப்படுத்தப்பட்ட குதிரைகளைப் பயன்படுத்தி போரில் வென்றனர். சில நேரங்களில், போர் வீரருக்கான அடையாளங்கள் ஏதுமின்றி போர்க்களத்தில் தோன்றி வெற்றி பெறுவதில் வல்லவர்களாக இருந்தனர். ஏழு வருட கடுமையான பயிற்சிக்குப் பிறகே, ஐரோப்பியப் படையில் போர்வீரனாக (Knight) முடியும்.ஸ்பானிய வீரர்கள்: ஸ்பானிஷ் நாட்டுப் போர் வீரர்களை 'கான்குயிஸ்டேட்டர்' (Conquisdator) என்று அழைப்பார்கள். இந்த ஸ்பானிஷ் வார்த்தைக்கு 'கைப்பற்றுகிறவர்கள்' என்று பொருள். இவர்கள் வெற்றி வீரர்கள் என்று புகழப்படுகிறார்கள். கான்குயிஸ்டேட்டர்களின் போர்த் திறனும், உத்தியும் மிகவும் சிறப்பானவை.மங்கோலிய வீரர்கள்: போர் முறைகளில் பிரசித்தமானவர்கள்! ஒன்றுபட்டுப் போரிடும் உத்தி மங்கோலிய வீரர்களிடம் இருந்தது. எதிரிகள் அவர்களை எளிதில் வெற்றி பெற முடியாது எனும் அளவிற்கு அசகாயச் சூரர்கள். மங்கோலிய வீரர்களில் முக்கியமான மன்னர் செங்கிஸ்கான். இது இவரது பட்டப் பெயர். இவருடைய நிஜப்பெயர் 'தெமுசின்'. கி.பி. 1162 ஆம் ஆண்டு பிறந்தவர். 'செங்கிஸ்கான்' என்றால், மங்கோலிய மொழியில் 'முழுமையான போர் வீரன்' என்று அர்த்தம்!அரபு வீரர்கள்: 'காஜி' என்ற அரபுச் சொல்லுக்கு 'வீரன்' என்று பொருள். இந்தச் சொல் இஸ்லாமிய ராணுவப் படை வீரர்களைக் குறிக்கிறது. அரபுப் பகுதிகள், பாலைவனப் பிரதேசம் என்பதால், அங்கு வசித்த மக்கள் நாடோடி வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டவர்களாக இருந்தார்கள். நாடோடி இன வாழ்க்கையில் பிற இனக் குழுக்களின் வசிப்பிடத்திற்குப் படை எடுத்து, அவர்களின் உடைமைகளைக் கவர்ந்து வருதல் இயல்பான போர்முறையாக இருந்தது.சாமுராய்: ஜப்பானிய சாமுராய்கள் வரலாற்றுப் புகழ்மிக்கவர்கள். பல நூற்றாண்டுகளாக ஜப்பானிய மன்னர்களின் பாதுகாவலர்களாக இருந்த இவர்கள் கி.பி. 7 முதல் 19ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்தவர்கள். நேர்மைக்கும் ஒழுக்கத்திற்கும் பெயர் பெற்றவர்கள். போரில் தோற்றுவிட்டால் எதிரியிடம் சரணடையாமல், தன்னைத்தானோ அல்லது மற்ற சாமுராய்களின் வாளால் கொல்லப்படுவது கூட அவர்களுடைய சட்டத்தில் ஒன்றாக இருந்தது.ராஜபுத்திரர்கள்: 'ராஜ்புத்' என்ற சொல்லுக்கு 'அரசனின் மகன்' என்று பொருள். வீரம் மிக்க இந்த இனத்தைச் சேர்ந்தவர்களை 'ராஜபுத்திரர்கள்' என அழைப்பார்கள். தற்போதைய ராஜஸ்தான் பகுதியில், 9 முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை அரசாட்சி செய்து வந்தனர். போர் செய்யத் தேவையான பல தற்காப்புக் கலைகளில் வல்லவர்களாக இருந்தார்கள். அத்தோடு இசை, சிற்பக்கலை, ஓவியம் என்று நுண் கலைகளிலும் தேர்ந்தவர்களாக இருந்துள்ளனர்.