உள்ளூர் செய்திகள்

எழுத்தும் படிப்பும் கல்வியும் அறிவும்!

எழுத்தறிவு, கல்வி, படிப்பு, கற்றதன் வழியொழுகல் ஆகியவற்றைப் பற்றி நம்முடைய பழந்தமிழில், தொடர்ந்து வலியுறுத்தினர். எண்ணுவது உயிர்களின் தலையாய இயல்பு. எண்ணங்களை எழுதுவது மனித குலத்தின் மிகப்பெரிய பண்பு. அந்த நிலையை அடைந்த பிறகுதான் நாம் பண்டு தொட்டுப் பெற்ற அறிவினை அடைந்தோம். எழுதுதல், படித்தல், கற்றல் ஆகியவை பற்றிய அழகான செய்யுள் இது.தனிப்பாடல் திரட்டில் இச்செய்யுளை இயற்றியவர் பெயர் தெரியவில்லை.'எழுதரிது முன்னம் எழுதியபின் னத்தைப்பழுதறவா சிப்பரிது பண்பா - முழுதுமதைக்கற்பரிது நற்பயனைக் காண்பரிது கண்டக்கால்நிற்பரிது தானந் நிலை'.எழுது அரிது முன்னம் - முதலில் எழுதுவதே அரிய செயல்தான்.எழுதிய பின் - எழுதிய பின்னர்,அத்தைப் பழுதற வாசிப்பு அரிது பண்பாம் - அதைப் பிழையில்லாமல் படிக்கத் தெரிவதும் அரிதாக வரக்கூடிய பண்பாகும். முழுவதும் அதைக் கற்பு அரிது - அவ்வாறு எழுதியவற்றினை அரைகுறையாகப் படிக்காமல் முழுமையாகக் கற்பது அருஞ்செயலாகும்.நற்பயனைக் காண்பது அரிது - கற்றுக்கொண்டவற்றில் நல்ல பயன்களைக் காணும் திறன் பெற்றிருப்பதும் அரிதுதான்.கண்டக்கால் நிற்பு அரிது தான் அந்நிலை - அப்படியே நல்ல பயன்களைக் காணத் தெரிந்தாலும் அதன்வழியே ஒருவர் அந்நிலையில் நிற்பதும் அரிது.எழுத்தின் பயன்கள் இவை. எழுத்து என்பது அரிய கலை. நமக்கு நன்றாக எழுதத் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் எழுத்துகளைப் படிப்பதும் அருமையான செயல்தான். படிப்பு கல்வியின் முதல்படி. கற்றனவற்றை உணர்ந்து அவ்வழியே வாழ்க்கையில் நிற்பதுதான், இவை அனைத்தினும் அரிது.- தமிழ் மலை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !