இந்தியாவின் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டுக்கான வளர்ச்சி குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்.) இயக்குனர் ஜூலி கோசாக், 'சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீட்டில், 2025- 26 நிதியாண்டுக்கான இந்தியாவின் வளர்ச்சி 6.6 சதவீதமாகக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா உலகுக்கான ஒரு முக்கிய வளர்ச்சி இன்ஜினாக உள்ளது. உலகளாவிய வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து பங்களிக்கிறது' என்று தெரிவித்திருப்பது மிகவும் கவனம் பெற்றிருக்கிறது. இருந்தபோதும், உலக நாடுகளில் அசாதாரண சூழல் நிலவும்போது, உண்மையிலேயே இந்தியா மிளிர்கிறதா? நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து வலுவாக இருக்குமா? வரும் மத்திய பட்ஜெட் அதை எப்படி எதிரொலிக்கும்? பட்ஜெட்டுக்கு முன் அரசுக்கு இருக்கும் சவால்களும், வாய்ப்புகளும் என்பது குறித்து பார்க்கலாம்.இந்தியாவில் பங்குச் சந்தை அடிக்கடி உச்சம் தொடுவதும், ஊசலாடுவதுமாக இருக்கிறது. பண்டிகை காலங்களில் ஆன்லைன் விற்பனையும், ஷாப்பிங் மால்களிலும் பரபரப்பாக விற்பனை நடக்கின்றன. அதை மாதாந்திர ஜி.எஸ்.டி. வசூல் மாதம் 1.75 லட்சம் கோடி அளவில் இருந்து நிரூபித்து வருகிறது.உலக பொருளாதார சூழலுக்கு ஏற்ப ஆர்.பி.ஐ., வட்டி விகிதங்களில் மாற்றம் செய்துள்ளது. ஜி.எஸ்.டி. 2.0க்குப்பிறகு வாகன விற்பனை அதிகரித்துள்ளது. உயர் சொத்துக்கள் விற்பனையிலும் தொய்வு காணப்படவில்லை. முதலீட்டாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு, இது சீரான வளர்ச்சி, நம்பிக்கையான பயணம்போல் தெரிகிறது. ஆனாலும், இந்த நம்பிக்கை தவறான கணிப்பாகக்கூட அமையலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.மேலோட்டமாகப் பார்த்தால், இந்திய பொருளாதாரத்தின் பின்னணியில் ஒரு மந்தமான நிலை இழையோடிக்கொண்டிருக்கிறது என்பதை உணர முடிகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில், அதிக அரசாங்கக் கடன், மந்தமாகி வரும் உள்நாட்டு வருவாய், குறைந்துவரும் குடும்ப சேமிப்பு, அதிகரிக்காத தனியார் முதலீடு மற்றும் பாதகமான புவிசார் அரசியல் சூழல் போன்றவை நாட்டின் வளர்ச்சிப் பாதையில் உள்ள தடைக் கற்களாக பார்க்கப்படுகிறது.தனியார் முதலீடுகளில் தயக்கம்
கடந்த 3 ஆண்டுகளாக, நாட்டின் பொருளாதாரத்தை இழுத்துச் செல்லும் மிக முக்கிய அம்சமாக அரசு செய்யும் மூலதனச் செலவு இருந்து வருகிறது. அதை குறைத்தால், ஜி.டி.பி., வளர்ச்சியில் தொய்வு வரும். அரசும் தனியார் நிறுவனங்களும் முதலீடு செய்யும் போதுதான் வளர்ச்சி தேவையான அளவு இருக்கும். தனியார் நிறுவனங்கள் புதிய முதலீடு செய்வதில் தயக்கம் இருப்பதை நிதி அமைச்சர் அடிக்கடி கோடிட்டு கூறி வருகிறார். இந்தியாவின் முன்னணி 50 நிப்டி கம்பெனிகளின் ரொக்க ரிசர்வ் மட்டும் 9 லட்சம் கோடி. தங்களது கம்பெனி விரிவாக்கத்திற்கு அதை பயன் படுத்தாமல் அதில் 3 லட்சம் கோடியை மற்ற கம்பெனிகளின் பங்குகளில் 'மியூட்சுவல் பண்டு'கள் மூலம் முதலீடு செய்திருப்பது இந்த தயக்கத்தை உறுதி செய்கிறது. தொழில் அமைப்புக்களுக்கு நம்பிக்கையீட்டும் வரி நிர்வாகம், சட்ட பாதுகாப்பு போன்றவற்றை அரசு கொடுக்கும் போது தூண்டப்பட்ட தனியார் முதலீடுகள் அதிகரிக்கும்.இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு கடன் விகிதமானது, ஜி.டி.பி.,யில் 80 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கிறது. இதில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடன்களும் அடங்கும். இருப்பினும் இந்த கடனை அரசு எப்படி குறைக்கும்? பல்வேறு நிதி மதிப்பீடுகளின்படி, நாட்டின் 4 நிலையான மிகப்பெரிய செலவுகளான, சம்பளங்கள் (28%), ஓய்வூதியங்கள் (15%), ஏற்கனவே உள்ள கடனுக்கான வட்டி (25%) மற்றும் மானியங்கள் மற்றும் நலத்திட்டங்கள் (15%) ஆகியவை சேர்ந்து அரசின் வருவாயில் 80 சதவீதத்தை உறிஞ்சிவிடுகின்றது.ஆனால் இன்று, வீட்டு சேமிப்பு, நாட்டின் ஜி.டி.பி.,யில் 10 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைந்துள்ளது. அதிகப்படியான இளைஞர் சக்தி, கடந்த பத்து ஆண்டுகளில் வேகமாக வளரும் 2 லட்சத்திற்கு மேற்பட்ட ஸ்டார்அப் நிறுவனங்கள், வளர்ச்சியை பதிவு செய்யும் யூனிகார்ன் நிறுவனங்கள், வளர்ந்த வெளிநாடுகளுக்கு இணையான உள்கட்டமைப்பு, புல்லட் ரயில் சேவை போன்ற போக்குவரத்து வசதிகள், எளிமைபடுத்தப்பட்டு வரும், வருமான வரி, ஜி.எஸ்.டி.,விகிதங்கள் போன்றவை இந்தியாவை வளர்ச்சி, முதலீடு, நம்பிக்கையின் சங்கமமாக பார்க்கப்பட்டாலும், உலகளாவிய சவால்களின் சங்கடங்களும் அதிகம் சூழ்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் பெரும்பாலான நாடுகளுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக மாறிவிட்டார். அவர்களில் பலர், பேச்சுவார்த்தை நடத்தி அதிக இறக்குமதி வரிகளில் இருந்து வெளியே வந்துவிட்டனர். இந்தியாவால் அந்த சிக்கலுக்கு இன்னும் தீர்வு காண இயலவில்லை.பெரும்பாலான அமெரிக்கர்கள் விரும்பாவிட்டாலும், இந்தியா மீது 500 சதவீத வரி விதிக்கும் மசோதா முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனது நண்பர் மோடி ஆனால், 'நான் மகிழும்படி அவர் நடந்துகொள்ளவில்லை' என்று டிரம்ப் பேசிவருவது எளிதாக கடந்து செல்லக் கூடியதல்ல. வெனிசுலா அதிபரை கைது செய்து, அமெரிக்காவுக்கு துாக்கி வந்துள்ள டிரம்ப் செயல் மொத்த உலக நாடுகளையும் அதிர வைத்துள்ளது. 'கிரீன்லாந்து எங்களுக்கு வேண்டும்' என்றுள்ளார். அதனால் புது வர்த்தகப்போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது. மேலும், கனடா, கொலம்பியா மற்றும் மெக்சிகோ மீதும் டிரம்ப் ஒரு 'கண்' வைத்துள்ளார். ரஷ்யாவின் எண்ணை இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது மிக அதிக வரிகளை விதிக்கும் திட்டங்களையும் அவர் இன்னும் கைவிடவில்லை. அமெரிக்காவில் விட்ட ஏற்றுமதி வர்த்தகத்தை ஐரோப்பிய நாடுகளில் பிடிக்கும் ஏற்பாடுகளில் இந்தியா மும்முரமாக உள்ளது. இருப்பினும், இந்தியாவின் ஏற்றுமதி வாய்ப்பிற்கு அமெரிக்கா ஒரு பெரிய சந்தை. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் வட்டி விகிதம் அதிகமாகி வருகிறது. டாலர் மதிப்பும் அதிகமாகி வருகிறது. இந்தியாவில் டாலர் மதிப்பு இப்போது 91 ரூபாயை தொட இருக்கிறது.டிரம்ப் விதித்த வரியால் நம்முடைய அமெரிக்க ஏற்றுமதியில் ஜவுளி, பின்னலாடை போன்ற சில துறைகள் மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளன. இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 28% பங்கு வகிக்கிறது அதேநேரம், கடந்த காலாண்டில் பயந்த அளவு மொத்த ஏற்றுமதியில் பெரிய சுணக்கம் இல்லை. இதுதவிர, ரஷ்யா - உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. மத்திய கிழக்கில் பிரச்னை நீடிக்கிறது. செங்கடல் வர்த்தக பாதையில் நெருக்கடி உள்ளது.இது தவிர, 'உள்நாட்டில் தயாரிப்போம்' என்று இந்தியா பின்பற்றி, பிரபலப்படுத்தி, பொருளாதாரத்தில் முன்னேறியதை பார்த்து நாம் மட்டுமின்றி, எல்லா நாடுகளும் பின்பற்ற ஆரம்பித்துவிட்டன. 'அமெரிக்கா முதலில்...' என்று அமெரிக்காவும் நம் பாணியை பின்பற்றுகிறது. வெளிநாட்டு பொருட்களை தவிர்த்து, உள்நாட்டு பொருட்களை வாங்க வேண்டும் என்பதற்காகதான் டிரம்ப் அதிக வரி போட்டு வருகிறார். டாலர் விலை 90 ரூபாய்க்கு மேல் போய்விட்டதால் வெளிநாட்டு வர்த்தக இடைவெளியை மேலும் அதிகப்படுத்தும். ஏற்றுமதி குறைந்துள்ளதால் நாடு முழுவதும் வேலைவாய்ப்புகளை பாதித்துள்ளது.சவால்கள்
இந்தியாவில் உலகளாவிய சவால்கள் இருக்கும் நிலையில், வரக்கூடிய மத்திய பட்ஜெட் முக்கியத்துவம் பெறுகிறது. ஜி.எஸ்.டி., தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிப்பு எதுவும் இருக்காது.வருமான வரிக்கான வரம்பு கடந்த பட்ஜெட்டில் ரூ.12 லட்சம் வரை உயர்த்தியிருப்பது நடுத்தர வர்க்கத்தினருக்கு நிம்மதி அளித்துள்ளது. புதிய வருமான வரிச்சட்டம் வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நடை முறைக்கு வருகிறது.தற்போது வரி செலுத்துபவர்கள் முக்கியமாக எதிர்பார்ப்பது, வருமான வரி, ஜி.எஸ்.டி., துறைகளிடமிருந்து தேவையற்ற நோட்டீஸ் பெறுவது, வரிச்சச்சரவுகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண்பது ( தற்போது 5 ஆண்டுகளாகியும் தீர்வு பெறாத பல அப்பீல்கள்) வருமான வரிப்பிடித்தங்களில் (டிடீஎஸ்) பல அடுக்கு வரிப்பிடித்த விகிதங்களை சீரமைப்பது போன்ற நிர்வாக நிவாரணங்கள்தான். ஸ்டார்ட் அப் தொடர்பான சலுகைகள் அறிவிக்கப் படலாம்.இத்தகைய சூழ்நிலையில் மத்திய நிதியமைச்சருக்கு நிறைய சவால்கள் உள்ளன. அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்பதால், சவால்களுக்கு பதிலளிக்கும் வகையிலும், ஏழை - பணக்காரர் இடையே உள்ள இடைவெளியை அதிகப்படாமல் இருக்கும் வகையிலும் உள்ள நல்ல பட்ஜெட்டைத் தருவார் என்று நம்பலாம்.