உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / தலையங்கம் / நிதீஷ் குமாரின் அணி மாற்றத்தால் கலகலத்துள்ள இண்டியா கூட்டணி

நிதீஷ் குமாரின் அணி மாற்றத்தால் கலகலத்துள்ள இண்டியா கூட்டணி

பீஹார் மாநில முதல்வர் நிதீஷ் குமார், 18 மாதங்களுக்கு முன், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்துஉருவாக்கிய, 'மஹாகட்பந்தன்' கூட்டணியை விட்டு நேற்று வெளியேறி, பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் இணைந்து, மீண்டும் முதல்வராகி உள்ளார்.நிதீஷ் இப்படி அணி மாறுவது முதல் முறையல்ல. இதற்கு முன், 2013ல் பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட போது, தே.ஜ., கூட்டணியை விட்டு வெளியேறி, லாலு கட்சியுடன் இணைந்து, பீஹாரில் ஆட்சி அமைத்தார். பின், 2017ல் லாலு கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மீண்டும் தே.ஜ., கூட்டணியில் இணைந்தார்.இதையடுத்து, 2022ல் தங்களின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை, பா.ஜ., உடைக்க முற்படுவதாக குற்றம் சாட்டி, தே.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேறினார். மீண்டும் லாலு கட்சி, காங்கிரஸ் உள்ளிட்டவற்றுடன் இணைந்து ஆட்சி அமைத்தார். தற்போது, அந்த கூட்டணியை விட்டு வெளியேறி, மீண்டும் பா.ஜ.,வுடன் அணி சேர்ந்துள்ளார். நிதீஷுடன் கூட்டணி சேருவதன் வாயிலாக, வரும் லோக்சபா தேர்தலில், 350க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து, மீண்டும் மோடி தலைமையில், மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற தங்களின் லட்சியம் நிறைவேறும் என்பதால், பா.ஜ., தலைவர்கள் இந்த அணி மாற்றத்திற்கு சம்மதம் தெரிவித்து உள்ளனர்.அதே நேரத்தில், நிதீஷின் இந்த முடிவால், 'வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., கட்சி வெற்றி பெறக்கூடாது; பிரதமர் மோடி மூன்றாவது முறையாகபிரதமராக வரக்கூடாது' என்ற ஒற்றை குறிக்கோளுடன், ஏழு மாதங்களுக்கு முன், பீஹார் மாநிலம் பாட்னாவில் உருவான இண்டியா கூட்டணி கடும்பின்னடைவை சந்தித்துள்ளது.அதற்கு காரணம், இண்டியா கூட்டணியை உருவாக்குவதில் முனைப்பு காட்டியவர் நிதீஷ் குமாரே.இண்டியா கூட்டணியின் சார்பில், சமீபத்தில் ஆன்லைன் வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில், கூட்டணியின் சேர்மனாக, காங்., தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவை நியமிக்க முடிவானது. அதே நேரத்தில், கூட்டணியின் அமைப்பாளராக நிதீஷ் குமாரை நியமிக்க முடிவானாலும், அது அமலாகவில்லை. இது, முதல்வர் நிதீஷ் குமாருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அத்துடன், லாலு கட்சியினரின் செயல்பாடுகளும் அவருக்கு நெருடலை ஏற்படுத்தின. எனவே, அந்தக் கட்சியுடனான கூட்டணியை முறிக்க நேரம் பார்த்து காத்திருந்தார். இந்த சூழ்நிலையில், இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் குறிப்பாக, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் இடையேயான தொகுதி பங்கீடு விஷயத்தில் சில மாநிலங்களில் குழப்பம் நிலவியதும், மேற்கு வங்கத்தில் தங்கள் கட்சி தனித்து போட்டியிடும் என முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்ததும், நிதீஷ் குமாருக்கு தீராத கோபத்தை ஏற்படுத்தியது.இருப்பினும், தற்போது பா.ஜ., தலைமையிலான அணிக்கு மாறுவதற்கு, நிதீஷ் கூறியுள்ள முதன்மையான காரணம், பீஹார் மாநில முன்னாள் முதல்வரும், சமூக நீதி அரசியலின் அடையாளமாக கருதப்படுபவருமான, மறைந்த கர்பூரி தாக்கூருக்கு, மத்திய அரசு, 'பாரத ரத்னா' விருது வழங்கி கவுரவித்திருப்பதாகும்.கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என, 2006ம் ஆண்டு முதல் நிதீஷ் குமார் கோரிக்கை விடுத்து வந்தாலும், மத்தியில் முன்பிருந்த காங்., அரசு அதை கண்டுகொள்ளவில்லை.அதை, மோடி அரசு நிறைவேற்றியதால், நிதீஷ் குமார் திருப்தி அடைந்துள்ளார். அத்துடன், தே.ஜ., கூட்டணியில் தொடர்ந்தால், பீஹார் மாநிலம் தொடர்பான மற்ற சில கோரிக்கைகளையும் மத்திய அரசு நிறைவேற்றும் என்றும் நம்புகிறார்.அது மட்டுமின்றி, 28 கட்சிகள் இணைந்து உருவாக்கிய இண்டியா கூட்டணியின் தலைவர்கள், இதுவரை நான்கு முறை நேரடியாக சந்தித்து பேசியிருந்தாலும், மக்களை கவரும் வகையிலான உருப்படியான செயல் திட்டங்கள் எதையும் அறிவிக்கவில்லை. ஆனால், பா.ஜ.,வோ தற்போதே செயல்திட்டங்களை வகுத்து, லோக்சபா தேர்தல் பிரசாரத்தையும் துவக்கி விட்டது. இந்த நிலைமையில் இண்டியா கூட்டணியில் தொடர்ந்தால், தங்கள் கட்சியால் மீண்டும் பீஹாரில் ஆட்சியை பிடிக்க முடியாது; தான் மீண்டும் முதல்வர் பதவியை அடைய முடியாது என்பதை கருதியே, தே.ஜ., கூட்டணிக்கு தாவியுள்ளார் நிதீஷ் குமார்.அவரின் இந்த தாவல், இண்டியா கூட்டணி தலைவர்களுக்கு பேரிடி என்பதுடன், அந்தக் கூட்டணி கலகலத்து காணாமல் போகும் சூழல் உருவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை