வீட்டிற்குள்ளேயே நுாலகம் புத்தகங்களே உலகம்: கவிஞர் மகாராசனின் இலக்கிய பசி
கவிஞரும் ஆய்வாளருமான மகாராசன், பெண்மொழி குறித்த ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர். தேனி மாவட்டம் பெரியகுளம் விக்டோரியா நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலைத் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.அவர் கூறியதாவது: எனது பூர்வீகம் மதுரையின் சின்ன உடைப்பு கிராமம். பள்ளி நாட்களில் ஆசிரியர்கள் என் தமிழ் உணர்வை வளப்படுத்தினர்.மதுரை யாதவர் கல்லுாரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் பயின்றேன். இங்குள்ள தமிழ்ப் பேராசிரியர்கள் என் தமிழ் அறிவுக்கும் உணர்வுக்கும் வழிகாட்டலை உருவாக்கிக் கொடுத்தார்கள்.எழுதுவதும், ஆய்வு செய்வதுமான மனப்பக்குவம் மதுரை காமராஜர் பல்கலை தமிழ்த் துறையில் பட்டமேற்படிப்பு பயின்ற காலத்தில்தான் கைவரப்பெற்றது. அங்கு மாணவராக இருக்கும் போதே 'ஏர்' எனும் பெயரில் ஓர் இதழை நடத்தி வந்தேன். அந்த இதழ் வழியாக எனது எழுத்துச் செயல்பாடுகள் பரவத் தொடங்கியது. நான் எழுதிய கட்டுரைகள் 'கீழிருந்து எழுகின்ற வரலாறு' எனும் நுாலாக 2006ல் வெளிவந்தது. சமூகப் பண்பாட்டு ஆய்வாளராய் என்னை அடையாளப்படுத்தியதும் அங்கீகாரத்தைத் தந்ததும் இந்த நுால்தான். இதில் கிடைத்த பாராட்டு தொடர்ந்து எழுதுவதற்கான உந்துதலைத் தந்தது.கல்லுாரி காலங்களில் ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் கதைகள் படிப்பதுண்டு. பிற்காலங்களில் கி.ராஜநாராயணன், பூமணி, சோ.தர்மன், சுந்தர ராமசாமி, ஜெயமோகன் கதைகளை படிப்பதுண்டு. இவர்களது கதைகள் கிராமத்து மனிதர்களின் வாழ்வியலை நெருக்கமாகக் காட்டுகின்றன. நானும் கிராமத்துப் பின்புலத்திலிருந்து எழுத வந்திருப்பதால் இவர்களது எழுத்துகள் எனக்கு நெருக்கமாக இருக்கின்றன.நான் எழுதிய 'நிலத்தில் முளைத்த சொற்கள்', 'சொல் நிலம்' எனும் இரண்டு கவிதை நுால்கள் வெளிவந்துள்ளன. இவற்றோடு தமிழ்ச் சமூகம், மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து, ஏறு தழுவுதல், அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல், பெண்மொழி இயங்கியல், தமிழ் நிலமும் புது வன்குடியாதிக்க எதிர் மரபும், முல்லைப்பாட்டு- உரைப் பனுவல் போன்ற பல நுால்கள் எழுதியுள்ளேன்.வாசிப்பும் தேடலும் உள்ளவர்கள் வேறு வேறு திசைகள் நோக்கி பயணப்படுவார்கள். குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவதும், கிணற்றுத் தவளையாக ஒரே நிலைக்குள் இருப்பதும் எனக்கு விருப்பமில்லை. புதிது புதிதாகத் தெரிந்து கொள்ள வேண்டும், புதிதான களங்களில் பயணப்பட வேண்டும். அப்போதுதான் வாசிப்பும் எழுத்தும் சுவராசியத்தோடு இருக்கும். புதிதாக கற்றுக் கொள்ளும் நோக்கில் எனது ஆய்வுக் களங்களைப் புதிதாகத் தெரிவு செய்து கொள்கிறேன்.மானுடத்தையும், நிலத்தையும் பண்பாட்டு நோக்கில் எடுத்துரைப்பதே எனது எழுத்துகளின் ஆத்மா என்று உணர்கிறேன். தமிழ் மொழி, இலக்கியம், இலக்கணம், பண்பாடு, வாழ்வியல் உள்ளிட்ட தமிழர் மரபின் அறத்தையும் அழகியலையும் அரசியலையும் தனித்துவமாக அடையாளப்படுத்துவதே எனது எழுத்தின் நோக்கம்.என் வீட்டின் பாதியில் செம்பச்சை என்ற பெயரில் நுாலகம் நடத்துகிறேன். கால் நுாற்றாண்டாய் சேகரிப்பில் இருந்த நுால்கள் இங்கு உள்ளன. அறிவுத் தாகம் உள்ளவர்கள், ஆய்வு மாணவர்கள், படைப்பாளிகள், போட்டித் தேர்வர்கள் சனி, ஞாயிறுகளில் நுாலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். விருந்தினர் அறை உள்ளதால், வயது மூப்பு கொண்ட ஆய்வாளர்கள் எத்தனை நாள் வேண்டுமானாலும் தங்கியிருந்து எழுத்துப் பணிகளை மேற்கொள்ளலாம். ஒரு சிற்றரங்கமாகவும் நுாலகம் செயல்படுகிறது.கலை, இலக்கியம், பண்பாடு சார்ந்த செயல்பாடுகளை அக்கறையோடு மேற்கொள்ளும் அமைப்புகளின் நிகழ்வுகளை நடத்திக் கொள்ளவும் அரங்கை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.இந்நுாலகத்திற்குப் புதிய, பழைய நுால்களை கொடையாக வழங்கலாம். இந்த நுாலகம் அடுத்தடுத்த தலைமுறைக்கும் பயன்பட வேண்டும். பெரியகுளத்தில் 208, நிமிர்வகம், வைகை அணை முதன்மைச் சாலை, காந்தி நகர், ஜெயமங்கலம் என்ற முகவரியில் நுாலகம் உள்ளது. அண்மையில் நான் எழுதிய 'நிலத்தில் முளைத்த சொற்கள்' கவிதை நுால் ஆங்கிலம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பாகி வெளிவரவுள்ளது.இவ்வாறு கூறினார்.இவரை வாழ்த்த 94436 76082ல் தொடர்பு கொள்ளலாம்.தமிழர் மரபில் காணப்படும் அறத்தையும் அழகியலையும் அரசியலையும் தனித்துவமாக அடையாளப்படுத்துவதே எனது எழுத்தின் நோக்கம்.