உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / இதுவல்லவோ பிறந்த நாள்... இளங்குமரனுக்கு இனிய நாள்

இதுவல்லவோ பிறந்த நாள்... இளங்குமரனுக்கு இனிய நாள்

பொதுவாக பிறந்தநாளில் கேக் வெட்டி, நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்து கொண்டாடும் பழக்கம் பெருகி வருகிறது. ஆனால் ஒவ்வொரு பிறந்தநாளையும் புதுமையான முறையில் பிறருக்கு கொடுத்து உதவுவது, பள்ளி ஆசிரியர்களை தேடி கண்டுபிடித்து பாதபூஜை செய்து கவுரவிப்பது என பிறந்தநாளில் மனதார மகிழ்ச்சி அடைகிறார் மதுரை கே.புதுாரைச் சேர்ந்த நாற்பத்தேழு வயது தொழிலதிபர் இளங்குமரன்.அவர் கூறியதாவது: நான் பிறந்து வளர்ந்தது மதுரை கருப்பாயூரணியில். அங்குள்ள அப்பர் ஆரம்பப் பள்ளியில் கல்வி பயின்றேன். அப்பர் உயர்நிலைப்பள்ளியில் 7 முதல் 10ம் வகுப்பு முடித்தேன். பின் அமெரிக்கன் கல்லுாரி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 முடித்தேன். ரியல் எஸ்டேட் தொழிலில் 27 ஆண்டுகளாக இருக்கிறேன். நான் இந்த நிலைமையில் இருக்க காரணமான எனது ஆசிரியர்களை கவுரவப்படுத்துவது என் நீண்ட நாள் கனவு. நான் பயின்ற பள்ளி ஆசிரியர்களில் ஒருவர் என் அப்பாவிற்கும் ஆசிரியர். ஆரம்பப் பள்ளி ஆசிரியர் காந்தி என்னை எப்போதும் உறவுமுறையோடு தான் அழைப்பார். ஏழு, எட்டாம் வகுப்புகளில் கணக்கில் 'ஜஸ்ட் பாஸ்' தான். ஒன்பதாம் வகுப்பில் ஜென்னட் மேரி ஆசிரியர் என் தலையில் குட்டி கணக்கு சொல்லிக் கொடுத்த ஞாபகம் இன்னும் உள்ளது. 10ம் வகுப்பில் நுாற்றுக்கு 89 மார்க் வாங்கக் காரணம் அவர்தான். என் தங்கையும் அவரிடம் கணக்கு பயின்று நுாற்றுக்கு நுாறு வாங்கினார். இன்று சிவகங்கையில் கணக்கு டீச்சராக உள்ளார்.பள்ளிப் பருவத்திலேயே கலை, விளையாட்டுகளில் எனக்கு ஆர்வமுண்டு. உடற்கல்வி ஆசிரியர் பொன்னையா, கபடி கோச்சாக என்னை நியமித்தவர். கல்லுாரி பருவத்திலும் எனது பள்ளியில் படித்துக்கொண்டிருந்த மாணவர்களுக்கு கபடி பயிற்சியளித்து பள்ளிகளுக்கு விளையாட அழைத்துச் செல்வேன். ஒவ்வொரு ஆண்டும் என் பிறந்தநாளுக்கு புதுமையாக ஏதாவது செய்ய விரும்புவேன். இந்தாண்டு நான் படித்த மூன்று பள்ளிகளில் இருந்து என்னை வளமாக்கிய 10 ஆசிரியர்களை எனது வீட்டிற்கு அழைத்தேன். தம்மிடம் படித்த மாணவன் நல்ல நிலைமையில் உள்ளான் என்பதைக் கண்டு அவர்கள் மகிழ்ந்தனர். அவர்களுக்கு பாத பூஜை செய்தேன். அப்போது ஒரு ஆசிரியர், 'என் மகன், மருமகளே மதிக்காத காலத்தில் நீ பாதபூஜை செய்து கவுரவிப்பது மனநிறைவாக உள்ளது' என கண்கலங்கினார். அவர்களுக்கு பொன்னாடை, சந்தன மாலை அணிவித்து, ஷீல்டு கொடுத்து, இனிப்பு வழங்கினேன்.இன்றைய சமூகத்தில் இளைஞர்கள் சீரழியக் காரணம் ஆசிரியர்கள் கைகளை கட்டிப் போட்டதால் தான். அவர்களிடம் பிரம்படி படாத மாணவன் போலீசிடம் பிரம்படி படுவான். அவர்களும் இன்று கண்டுகொள்ளாததால் போதைக்கு இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். மாணவர் சமுதாயத்தை சீர்திருத்த ஆசிரியர்களால் மட்டுமே முடியும். அவர்களுக்கு மாணவர்களை அடித்து திருத்த சுதந்திரம் கொடுத்தால்தான் அது சாத்தியப்படும். அப்பர் உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் கட்ட தாளாளரிடம் ரூ.ஒரு லட்சம் காசோலையை வழங்கினேன். என் மனைவி பிறந்தநாளன்று என்.எம்.ஆர்., சுப்பராமன் உறைவிடப்பள்ளி மாணவர்களுக்கு புத்தாடை வழங்கி கேக் வெட்டி கொண்டாடினோம். 2022ல் என் பிறந்தநாளுக்கு தேவதாஸ் மருத்துவமனையுடன் இணைந்து 500க்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெற இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் நடத்தினேன். மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மூன்று சக்கர வாகனம் வழங்கியுள்ளேன். திருநங்கைகளுக்கு புத்தாடை கொடுத்துள்ளேன். பிறருக்கு கொடுத்து உதவுவதில் அவர்கள் முகம் மலரக் காண்பதே எனக்கு சந்தோஷம் என்றார்.இவரை வாழ்த்த 96009 39906


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !