அம்மாவின் வழியில்... அபிநய தாரகை
இளைய தலைமுறையினரிடையே நம் பாரம்பரிய நடனக் கலையை கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் இருபது வயதேயான ஸ்ரீஅம்சினி. மதுரை கலாகேந்திரா அகாடமியின் இயக்குநரான இவர், மஹா சிவராத்திரியை முன்னிட்டு 9 ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி நடத்தி பல்வேறு உலக சாதனைகளை புரிந்துள்ளார். இதுகுறித்து இவர் நம்மிடம் பகிர்ந்தவை...இரண்டரை வயதிலேயே பரதநாட்டிய உடையணிந்து மேடையில் ஆடுபவர்களை பார்த்து ஆடியிருக்கிறேன். மூன்றரை வயதில் நவராத்திரியின் போது மீனாட்சியம்மன் கோயிலில் பின்னல் கோலாட்டம் ஆடினேன். 8ம் வகுப்பு படிக்கும் போது முதன்முறையாக அரங்கேற்றம் செய்தேன். ஆடிப்பூர விழாவில் ஸ்ரீவில்லிப்புத்துார் ஆண்டாள் கோயிலில் நடனம் புரிகிறேன். இதுவரை 382 மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன்.அம்மா ஷைலஜா பரதக் கலைஞர். அவரிடம் பரதம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நடனங்களை பயின்றேன். அம்மா என்றாலும் அவருக்கு சீடராக இருப்பதில் பெருமை கொள்கிறேன். அவர் தன் வாழ்வையே நடனத்திற்காக அர்ப்பணித்தவர். 2018ல் மதுரையில் 2000 பேர் முன்னிலையில் ஒயிலாட்டத்தில் கின்னஸ் சாதனை புரிந்த முதல் நடனக் கலைஞர். அவரது வழியில் நானும் தொடர்கிறேன்.ஜமீன்தார் பரம்பரையைச் சேர்ந்த பாட்டி சரோஜா, 40 ஆண்டுகளுக்கு முன் கலாகேந்திரா அகாடமியை துவக்கினார். பின் நடனம் மட்டுமின்றி, பெண்களை மேம்படுத்தும் நோக்கில் தையல், டியூஷன், பியூட்டி பார்லர் என ஆரம்பிக்கப்பட்டது.அகாடமி சார்பில் அம்மா 36 நாட்டிய நாடகங்கள் புரிந்துள்ளார். இந்திய அளவில் 22 உலக சாதனை புரிந்த நடனப் பள்ளியாக கலாகேந்திரா திகழ்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் அம்மா இறந்த பின் அகாடமியின் இயக்குநர் பொறுப்பை கவனித்து வருகிறேன். பரதக் கலைஞரான அப்பா மகாதேவன், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து பக்கபலமாக இருக்கிறார். 720 கலைஞர்களை கொண்டு 'அன்னைக்கு சமர்ப்பணம்' நாட்டிய நிகழ்வில்அம்மா குறித்து கவிதைகள் படைத்து உலக சாதனை புரிந்தோம். கடந்த 3 ஆண்டுகளாக மஹா சிவராத்திரியை முன்னிட்டு 24 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் நாட்டியாஞ்சலி நடத்தி சாதனை புரிந்து வருகிறோம். இந்தாண்டு 400 கலைஞர்கள் மூலம் திருவாசகத்துடன் நடனமாடி சாதனை புரிந்தோம்.தேவாரம் பாடிய 14 பாண்டிய நாட்டுத் தலங்களில் 7 மாவட்டங்களில் உள்ள 7 கோயில்களுக்கும் 3 நாட்களில் சென்று பரதம் ஆடி உலக சாதனை புரிந்தோம். இவை உள்ளடக்கிய 8 உலக சாதனைகள் படைத்துள்ளோம். பரதத்தின் பயன்
நாட்டியத்தின் பின்புலத்தில் கேட்கும் இசையை உள்வாங்கி தன்னை மறந்து ஆடுவதே பரதம். அதை கற்றுக் கொண்டால் தன்னம்பிக்கை கூடும். மேடையை எதிர்நோக்கும் பக்குவம் கிடைக்கும். அதனால் எவ்வித சவால்களையும் எதிர்கொள்ளும் துணிச்சல் பிறக்கும்.செயல்களில் நேர்த்தி இருக்கும். யோகத்திற்கு இணையாக பரதத்திலும் முத்திரைகள் உள்ளன. ஒருமுகத்தன்மை அதிகரிக்கும். மன அழுத்தம் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அனைவருக்கும் பாரம்பரிய கலை சென்று சேர வேண்டும் என்பது அம்மாவின் குறிக்கோள். அதை லட்சியமாக கொண்டு நிறைவேற்ற முயற்சிப்பேன் என்றார் தன்னம்பிக்கையுடன்...இவரை வாழ்த்த 80155 73213