மேலும் செய்திகள்
'கொங்கு தேன்' சுவைத்தேன்!
28-Sep-2025
வாசகர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்து, வாசித்தவர்கள் தங்களின் வாசிப்பு அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றனர். ஆங்கில எழுத்தாளர் உம்பர்டோ எக்கோ எழுதிய, 'THE NAME OF THE ROSE' என்ற புகழ் பெற்ற நாவலை, பேராசிரியர் எம்.டி.முத்துக்குமாரசாமி 'ரோஜாவின் பெயர்' என்ற பெயரில், தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இந்த நாவல் குறித்து, இலக்கிய திறனாய்வாளர் ஜோதிமணி, தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். எழுத்தாளர் உம்பர்டோ எக்கோ, இத்தாலியை சேர்ந்தவர். ஐரோப்பிய கிறிஸ்தவ மதம் குறித்து ஆய்வு செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர். இவர், 700 ஆண்டு களுக்கு முன் நடந்த வரலாற்று சம்பவத்தை மையமாக வைத்து, 'தி நேம் ஆப் தி ரோஸ்' என்ற இந்த நாவலை எழுதி இருக்கிறார். இந்த நாவல் வெளிவந்த போது, உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. 13ம் நுாற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில், மத குருமார்களுக்கும், அரசர்களுக்கும் இடையே இருந்த அதிகார போட்டியை மையமாக வைத்து, இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. சமீபத்தில் பேராசிரியர் எம்.டி.முத்துக்குமாரசாமியின் மொழி பெயர்ப்பில், 'ரோஜாவின் பெயர்' என்ற பெயரில், 800 பக்கங்களில் இந்த நாவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே ஆங்கிலத்தில் இந்த நாவலை நான் படித்து விட்டேன். இருந்தாலும், தமிழ் மொழி பெயர்ப்பில் எப்படி வந்துள்ளது என்பதை அறிய, வாங்கி படித்தேன். தமிழில் நன்றாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பொறுமையாக படிக்க வேண்டும். இலக்கிய வாசகர்கள் படித்து புரிந்து கொள்ளலாம். இந்த நாவலை பற்றி சுருக்கமாக சொல்வது என்றால், கி.பி., 13ம் நுாற்றாண்டுகளில் மத குருமார்களுக்கும், அரசர்களுக்கும் இடையே நடந்த, பனிப்போர்தான் இந்த நாவல். இத்தாலியில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியார்களுக்கு என, தனி பயிற்சி கல்லுாரி இருக்கிறது. இங்கு இளம் பாதிரியார்கள், மதம் சார்ந்த கல்வியை படித்து பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த தேவாலயத்தின் தலைமை போப்புக்கும், அந்த பகுதியை ஆட்சி செய்து வரும் அரசருக்கும் கருத்து மோதல் ஏற்படுகிறது. தேவாலயத்தை அரசர் தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர நினைக்கிறார். அதற்கான வாய்ப்பை அவர் எதிர்பார்த்து கொண்டிருந்த போது, அந்த தேவாலயத்தில் பயிற்சி பெற்று வந்த இளம் பாதிரியார் ஒருவர், மர்மமான முறையில் இறந்து போகிறார். தேவாலய தரப்பில் இதை தற்கொலை என்கின்றனர். அரசர் இது கொலை என்று சந்தேகப்படுகிறார். உண்மை கண்டறிய அரசாங்கம், துப்பறியும் அதிகாரியை அங்கு அனுப்புகிறது. அந்த அதிகாரி விசாரணை நடத்திக்கொண்டு இருக்கும் போதே, மறுபடியும் அங்கு மூன்று கொலைகள் நடக்கின்றன. இந்த இடத்தில் இருந்து நாவல் சூடுபிடிக்கிறது. அடுத்தடுத்து பல சம்பவங்கள் நடக்கின்றன. இந்த கொலைகளை செய்தது யார் ? இதற்கான காரணம் என்ன என்று மர்மத்தை கண்டறியும் நோக்கில் நாவல் விரிகிறது. இது மர்ம நாவல் போல் இருந்தாலும், மர்ம நாவல் அல்ல; வரலாற்று சமூக நாவல். 800 ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பிய நாடுகளின் அரசியல் கட்டமைப்பு, மக்களின் சமய நம்பிக்கை மற்றும் சமூக சூழல் எப்படி இருந்து என்பது பற்றி, உண்மை சம்பவங்களை மையமாக வைத்து கற்பனையாக, இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. நாவல் முழுவதும் ஒருவிதமான சஸ்பென்ஸ் இருந்து கொண்டே இருக்கிறது. உம்பர்ட்டோ எக்கோவின் இந்த நாவல், தமிழில் வந்திருப்பது தமிழ் வாசகர்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு நல்ல வாய்ப்பு. 800 ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பிய நாடுகளின் அரசியல் கட்டமைப்பு, மக்களின் சமய நம்பிக்கை மற்றும் சமூக சூழல் எப்படி இருந்து என்பது பற்றி, உண்மை சம்பவங்களை மையமாக வைத்து கற்பனையாக, இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. நாவல் முழுவதும் ஒருவிதமான சஸ்பென்ஸ் இருந்து கொண்டே இருக்கிறது.
28-Sep-2025