| ADDED : மே 05, 2024 10:53 AM
நலிந்து வரும் நாட்டுப்புற கலைகளை பல வித்தியாசமான ஆபத்து நிறைந்த நடனமுறைகளை கையாண்டு புத்துயிரூட்டி வளர்த்து வருகிறார்கள் மதுரை துவரிமானைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள்.மதுரை திருமலை நாயக்கர் மகாலில் உலக மரபு வாரத்தை முன்னிட்டு சித்திரைச் சுற்றுலா கலைவிழா ஐந்து நாட்கள் நடந்தது. அதில் நாட்டுப்புற கலைஞர், கலைவளர்மணி பட்டம் பெற்ற நாகேஸ்வரன், 36, குழுவின் கிராமிய கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின.அவர் கூறியதாவது: ஆறு வயது முதல் இக்கலையில் இருக்கிறேன். மதுரை துவரிமானில் 'கலைத்தாய் கிராமிய பல்சுவை கலைக்குழு'வை நடத்தி வருகிறேன்.நமது பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் மீட்டெடுக்கும் விதமாக கிராமிய கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். எங்கள் குழுவில் 60 பேர் உள்ளோம். திருவிழா காலங்களில் ஊரில் உள்ளவர்களுக்கு பயிற்சி கொடுத்து வருகிறோம். பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கும் அவர்கள் அழைக்கும் இடத்திற்கே சென்று பயிற்சியளிக்கிறோம்.ஒயிலாட்டம், கரகாட்டம், மரக்கால் ஆட்டம் எதுவாக இருந்தாலும் 15 வயது மதிக்கத்தக்க ஒரு புதியவரை தயார்படுத்த குறைந்தபட்சம் மூன்று மாதம் ஆகும். திருவிழா காலங்களில் நிகழ்ச்சி வாய்ப்பு இருக்கும். மற்ற நேரங்களில் அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் எங்கள் கலையினை வெளிப்படுத்தி வருகிறோம். அரசின் பண்பாட்டுத் துறையில் நாட்டுப்புற கலை சார்பில் எங்களுக்கு நலவாரியம் உள்ளது. அதன் மூலம் சில சலுகைகள் கிடைக்கின்றன.அரசு எல்லா கலைஞர்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும். வெளிநாடு, வெளிமாநில நிகழ்ச்சிகளில் பங்கேற்க இயலாத கலைஞர்களுக்கும் திறமைகளை மதிப்பீடு செய்து வாய்ப்பு தர வேண்டும். தோலில் அடித்துக்கொள்வது, கரகம் ஆடுவது, தவில் வாசிப்பது என உடலை வருத்திக்கொள்வதால் இந்த கலையில் இருக்கும் பலரும் குடிப்பது இயற்கை. அவ்வாறு குடிப்பவர்களால் 60 வயதை தொட வாய்ப்பில்லை. எனவே ஓய்வூதிய வயது வரம்பை ஆண்களுக்கு 50, பெண்களுக்கு 45 வயதாக குறைக்க வேண்டும்.அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க குறிப்பிட்ட தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்குவார்கள். கூடுதலாக அரசு ஊக்கத்தொகை வழங்கினால் கிராமியக் கலைகள் அழியாமல் தடுக்கலாம் என்றார்.கலைக்குழுவை சேர்ந்த செந்தில்குமார் கூறியதாவது: நான் பத்து வயது முதல் இக்கலைத்துறையில் இருக்கிறேன். மதுரை இசைக் கல்லுாரியில் நாட்டுப்புற கலையில் டிப்ளமோ முடித்துள்ளேன். பொதுவான கரகம் ஆடுவதற்கும் தொழில் ரீதியாக கரகம் ஆடுவதற்கும் வித்தியாசம் உள்ளது. பிளேடு, ஊசி எடுத்தல், ஏணியில், சைக்கிளில், அந்தரத்தில் கயிறு கட்டி கரகம் ஆடுவது, கோடாங்கி கட்டை உருட்டி ஆடுவது, நாற்காலியில் கரகம் வைத்து ஆடுவது தொழில் கரக வகை.கரகத்தை வைத்துக்கொண்டே குனிந்து கண் மூலம் பிளேடு, ஊசி எடுத்தல் போன்றவற்றிற்கு ஐந்து வருடங்களாக பயிற்சி எடுத்துள்ளேன். இவை ஆபத்து நிறைந்த கரக முறைகள் என்றாலும் பயிற்சி இருந்தால் வெற்றி கிடைக்கும். மக்களை மகிழ்விப்பது கலைஞனின் கடமை. ஆபத்தை பார்த்தால் முடியாது என்றார். இவர்களை வாழ்த்த 88831 41840