உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / கார்பனை குறைக்கும் ஒரே சக்தி பாரம்பரிய மேய்ச்சல் நிலம்: எழுத்தாளர் வெற்றிச்செல்வன் ராஜேந்திரன்

கார்பனை குறைக்கும் ஒரே சக்தி பாரம்பரிய மேய்ச்சல் நிலம்: எழுத்தாளர் வெற்றிச்செல்வன் ராஜேந்திரன்

'மேய்ச்சல் நிலம்தேடி சாலையில் அலையும் கடைசிக் கீதாரியின் கடைசிக் கிடை மாடு நான்தான். என் மேய்ச்சல் நிலமென்பது நீங்கள் நின்றுகொண்டிருக்கும் இந்த இடமாகக் கூட இருக்கலாம். அல்லது உங்கள் தேவைக்கு கட்டிய இந்த பகட்டு மாளிகையாக இருக்கலாம். அல்லது நீங்கள் வேலி போட்டு அடைத்த இந்தப் பெருமலைக் காடுகளாக இருக்கலாம். எல்லாவற்றையும் நீங்களே எடுத்துக்கொண்டபின் நான் சாலையில் காகிதம் பொறுக்குவதும் என் மேய்ப்பான் அரபு நாட்டில் ஒட்டகம் மேய்ப்பதும் ஞாயம்தானே...!- இந்த கவிதைக்கு சொந்தக்காரர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே உடைகுளம் வெற்றிச்செல்வன் ராஜேந்திரன். சிங்கப்பூரில் பொறியாளராக பணிபுரிகிறார்.இவரது 'குளம்படி' நாவலில் ஆடு, மேய்ச்சல் நில மனிதர்களின் வாழ்க்கையை துல்லியமாக நமக்கு காட்டுகிறார். நாவல் படித்து முடிக்கையில் ஒவ்வொருவருக்கும் ஆட்டின் வீச்சம் உள் நுழைந்திருக்கும்.அவர் கூறியதாவது: கிடையில் பிறந்து, வாழ்ந்தவன். ஆடுமேய்த்துள்ளேன். தாய்மொழி மீதான ஈர்ப்பால் எழுதத் துவங்கினேன். சிங்கப்பூர் வந்த பின் வாசிப்பு, கவிதை எழுதுவதில் கவனம் செலுத்தினேன்.கவிமாலை அமைப்பு 2018ல் அனைத்து மொழிகளுக்கான கவிதை போட்டி நடத்தியது. எனது 'தேக்காவில் பொம்மை வாங்குபவன்' கவிதை தொகுப்பிற்கு முதல் பரிசு கிடைத்தது. ஆடு, மாடு மேய்க்கும் கிடைத் தொழில் பற்றி குறிப்புகள் சங்க இலக்கியத்தில் அதிகம் உள்ளன. நவீன எழுத்துலகில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் சில எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர். 'கீதாரி' நாவலை எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி, 'கிடை' நாவலை எழுத்தாளர் கி.ராஜநாராயணன் எழுதியுள்ளனர். எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'கூளமாதாரி' கிடைத்தொழில் சார்ந்தது. 'கீதாரியின் உப்புக் கண்டம்' கவிதை தொகுப்பு என்னை பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.1990 முதல் 2010 வரை நவீன மாற்றத்தில் கிடைத் தொழில் சந்தித்த இன்னல்களை 'குளம்படி' நாவலில் எழுதியுள்ளேன். இதை வாசித்தவர்கள் கண்ணீர்விட்டு அழுததாக கூறினர். சில எழுத்தாளர்கள் பாராட்டினர். இது அறிமுக எழுத்தாளருக்கான அங்கீகாரம். கதைப் போக்கின் தொடராக பின்னோக்கி 1960-70 வரையிலான கிடைத் தொழிலின் வாழ்வுமுறை பற்றி 'குளம்படி' 2வது பாகம் வெளிவர உள்ளது.கிராம பொருளாதாரத்தில் ஆடு, மாடுகளின் பங்களிப்பு 8 சதவீதம். ஐ.நா.,சபை 2026- ஐ உலக மேய்ச்சல் நிலம், மேய்ச்சல் குடிமக்களுக்கான ஆண்டாக அறிவித்துள்ளது. பாரம்பரிய மேய்ச்சல் நிலத்தை மீட்டெடுக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. காற்றில் வெப்பத்தை அதிகரிக்கும் கார்பனை குறைக்கும் சக்தி மேய்ச்சல் நிலம், ஆடு, மாடுகளுக்கு உள்ளது. தமிழர்களின் அறத்திலேயே வாய்பேச முடியாத உயிரினங்களுக்கு உதவுவதே சிறந்த அறம் என்றார்.gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி