உள்ளூர் செய்திகள்

டிராகன்ஸ் பிரீமியர் லீக் கிரிக்கெட் பரிசளிப்பு விழா

டிராகன்ஸ் பிரீமியர் லீக் (DPL - T20 கிரிக்கெட்) இறுதி போட்டி மற்றும் பரிசளிப்பு விழா கடந்த 24அக்டோபர் அன்று ரியாத்தில் சிறப்பாக நடைபெற்றது ரியாத் நகரில் செயல்பட்டு வரும் முன்னணி கிரிக்கெட் அமைப்பான ரியாத் டிராகன்ஸ் (RDCC) சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் “டிராகன்ஸ் பிரீமியர் லீக் (DPL - T20)” கிரிக்கெட் தொடர் இவ்வாண்டும் சிறப்பாக நடைபெற்றது. ரியாத் நகரைச் சேர்ந்த திறமையான கிரிக்கெட் வீரர்கள் கொண்ட ஆறு அணிகள் இத்தொடரில் பங்கேற்றன. இத்தொடரின் இறுதி போட்டி, அக்டோபர் 24ஆம் தேதி காலை Dragon Legends மற்றும் Dragon Kings அணிகளுக்கிடையே நடைபெற்றது. திறம்பட்ட ஆட்டம் மற்றும் த்ரில்லான போட்டியைத் தொடர்ந்து, Dragon Legends அணி இந்த ஆண்டிற்கான சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. அதே நாளின் மாலை, RDCC சார்பில் “DPL T20 பரிசளிப்பு விழா & ரியாத் குடும்ப ஒன்றுகூடல் நிகழ்ச்சி” ரியாத் நகரிலுள்ள ஒரு இஸ்திராஹில் மகிழ்ச்சியும் உறவிணைப்பும் நிரம்பிய வகையில் நடைபெற்றது. கிரிக்கெட் வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்வின் தொடக்கத்தில் RDCC ஒருங்கிணைப்பாளர் கமருதீன் RDCC-யின் உருவாக்கம் மற்றும் கடந்த ஒன்பது ஆண்டுகால பயணத்தை நினைவுகூர்ந்து உரையாற்றினார். தொடர்ந்து, RDCC மூத்த உறுப்பினர் மற்றும் Gulf Speed Shipping Company (GSS) பொறுப்பாளர் சாதிக், “RDCC ஆண்டு விழா என்பது வெறும் விளையாட்டு களியாட்டம் அல்ல, இது சகோதரத்துவமும் குடும்ப பாசமும் இணையும் ஒரு மேடை” எனக் குறிப்பிட்டார். மேலும், RDCC மூத்த உறுப்பினர் மற்றும் Smart Shield Cyber Security பொறுப்பாளர் செய்யது மீரான், “RDCC சமூகப் பொறுப்புடன் செயல்படும் அமைப்பு. இரத்த தானம், அவசர உதவி, மற்றும் சமூகப் பங்களிப்புகளில் எப்போதும் முன் நிற்கும் குழுவாக RDCC திகழ்கிறது” என கூறினார். பின்னர், யூனுஸ் “Seed Therapy” குறித்த விழிப்புணர்வு உரையையும், பரத் முதலுதவி, சிபிஆர் மற்றும் அவசரநேர உதவி பயிற்சி வகுப்பையும் வழங்கினர். இது விளையாட்டு வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பயனுள்ள அறிவூட்டும் நிகழ்வாக அமைந்தது. பின்னர் குடும்பத்தினர் மற்றும் வீரர்கள் இணைந்து பல்வேறு பொழுதுபோக்கு விளையாட்டுகள், சிறப்பு போட்டிகள் மற்றும் அறிவுசார் செயல்பாடுகளில் பங்கேற்று மகிழ்ந்தனர். பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரியாத் தமிழ் சங்கம் முன்னாள் தலைவர் சாகுல் ஹமீத், இவ்வருடம் DPL T20 தொடரில் வெற்றி பெற்ற அணிக்கு சாம்பியன் கோப்பையும் மற்றும் இதர போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பதக்கம் மற்றும் பரிசுகளை வழங்கி கௌரவித்தார். தனது சிறப்புரையில் அவர், “விளையாட்டு என்பது மதம், மொழி, இன வேற்றுமைகளை கடந்து மனிதர்களை இணைக்கும் நல்லிணக்க பாலம். RDCC-யின் ஒற்றுமையும் சமூக அக்கறையும் பாராட்டத்தக்கது” என வாழ்த்தினார். இறுதியில், அனைவருக்கும் சுவையான இரவு விருந்தோம்பல் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு நட்பு, குடும்ப இணைப்பு மற்றும் சமூக அன்பை வெளிப்படுத்திய மறக்க முடியாத தினமாக இருந்தது என அனைவராலும் பாராட்டப்பட்டது. - சவூதியிலிருந்து தினமலர் வாசகர் ஆரிப் அப்துல் சலாம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !