உள்ளூர் செய்திகள்

கத்தாரில் இந்திய தூதரகம் சார்ந்த அமைப்புகளுக்கான தேர்தல்

வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மேற்பார்வை மற்றும் ஆதரவில் இயங்கும் இந்திய கலாச்சார மையம், இந்திய சமூகம் நலவாழ்வு மன்றம், இந்திய விளையாட்டு மையம் ஆகிய அமைப்புகளின் தலைமை மற்றும் பிறபொறுப்பாளர்களுக்கான தேர்தல் நடந்தது. இரண்டாடுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த தேர்தல் இந்த ஆண்டு ரைட்டூஓட்(Right2Vote) என்கிற செயலி வாயிலாக வெற்றிகரமாக நடந்து முடிந்தது. கத்தாரில் வாழும் பிறநாட்டு மக்களிடமும் இந்தியாவின் வளமான கலாச்சாரத்தைப் பரப்புவதும், இந்திய தூதரகத்தின் ஒரு அமைப்பாக செயல்பட்டு இந்தியா- கத்தார் நட்பின் ஆழத்தில் பதிந்திருக்கும் கலாச்சார உறவினை வலுப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்ற இந்திய கலாச்சார மையத்தின் தலைவராக ஏ.பி. மணிகண்டன் 64% வாக்காளர்களின் ஆதரவோடு வெற்றி பெற்றார். மேலாண்மை குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஆபிரகாம் கன்டத்தில் ஜோசப், அஃப்சல் அப்துல் மாஜித், ஷாந்தனு தேஷ்பாண்டே, நந்தினி அப்பாகோனி ஆகியோரும் பிரம்மாண்டமான வெற்றி பெற்றனர். இந்திய சமூக நலவாழ்வு மன்றத்தின் தலைவராக ஷாநவாஸ் பாவா தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் 62% சதவிகித வாக்குகளை தனதாக்கி வெற்றிக் கனியைப் பறித்தார். ICBF அலுவலகத்தில் மேலாண்மை குழு உறுப்பினர்களாக சேவை செய்யும் பொறுப்பில் நிர்மலா குரு, ரஷீத் அஹமத், தீபக் ஷெட்டி, ஜாஃபர் தய்யில் ஆகியோர் வெற்றிவாகை சூடினர். அதே போல இந்திய விளையாட்டு மையம் தேர்தலில் 70% வாக்காளர்களின் ஆதரவுடன் இ.பி. முகம்மது அப்துல் ரகுமான் தலைவராகிறார். அவருக்கு துணையாக மேலாண்மைக்குழு உறுப்பினர்களாக அப்துல் பஷீர் துவரைக்கால், கவிதா மகேந்திரன், ஹம்ஸா யூசுஃப், தீபக் சுக்காலா ஆகியோர் வெற்றி பெற்றனர். இதுமட்டுமல்லாது, இந்த மூன்று அமைப்புகளின் நிர்வாகக்குழு நியமன உறுப்பினர்களாக முறையே ரவீந்திர பிரசாத் சுப்பிரமணியம், பிரதீப் மாதவன் பிள்ளை, சந்தீப் தேவபள்ளி ஶ்ரீராம் ரெட்டி, நிஜாமுதீன் காஜா மற்றும் எம்.டி. ஆசீம் ஜெயித்தனர். இந்திய கலாச்சார, சமூக , விளையாட்டு அமைப்புகளின் தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் நிர்மலா குரு, ரவீந்திர பிரசாத் சுப்பிரமணியம், கவிதா மகேந்திரன் ஆகியோர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தமிழர்களுக்கு கிடைத்துள்ள சிறப்பான முத்திரை வெற்றி என்று கத்தார் வாழ்தமிழர்கள் இவர்கள் மூவரையும் வெற்றித் தமிழர்களாக வெகுவாகப் பாராட்டி மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். - நமது செய்தியாளர் எஸ். சிவ சங்கர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்