சிங்கப்பூர் ஆலயத்தில் கார்த்திகை முதல் சோம வார வழிபாடு கோலாகலம்
சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணர் ஆலயத்தில் கார்த்திகை முதல் சோம வார பூஜை நவம்பர் 18 ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை நித்ய பூஜையைத் தொடர்ந்து ஆறு மணிக்குத் தலைமை அர்ச்சகர் நாகராஜ சிவாச்சாரியார் யாக சாலை பூஜையைத் தொடங்கினார். திரளான பக்தப் பெருமக்கள் பங்கேற்ற யாக சாலை பூஜைகள் கண்கொள்ளாக் காட்சியாக நடைபெற்றன. ஸ்ரீ விஸ்வநாதப் பெருமான் சர்வ அலங்கார நாயகராக எழுந்தருளி அருள்பாலித்தபோது மகா தீபாராதனை மிளிர்ந்தது. மாலை 6 45 க்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தை அடுத்து 7.15 மணிக்கு 108 சங்காபிஷேகம் பக்தப் பெருமக்களின் சரண கோஷத்திடை மெய்சிலிர்க்க வைத்தது. மகா தீபாராதனைக்குப் பின் அருள் பிரசாதம் பெற்ற பக்தப் பெருமக்களுக்கு அன்னப் பிரசாதம் வழங்கப்பட்டது. மீண்டும் 25.11.24 -02.12.24 -09.12.24 ஆகிய நாட்களிலும் சோம வார விசேஷ பூஜைகள் நடைபெறுமெனவும் திரளாகப் பக்தப் பெருமக்கள் கலந்து கொள்ளவும் ஆலய நிர்வாகம் அன்புடன் அழைக்கிறது. - நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்