ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன்
  ரவி மோகன் புதிதாக துவங்கியுள்ள தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் முதன்முறையாக ‛ப்ரோ கோடு' என்கிற படத்தை தயாரிக்கிறார். இதில் அவரே கதாநாயகனாக நடிக்க, டிக்கிலோனா பட இயக்குனர் கார்த்திக் யோகி இயக்குகிறார். ப்ரோ கோடு என்கிற பெயரை படத்தின் டைட்டிலாக பயன்படுத்தக் கூடாது என்று ப்ரோ கோட் என்கிற பெயரில் ஆல்கஹால் தயாரித்து விற்கும் ஒரு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் இந்த பெயரை டைட்டிலாக பயன்படுத்துவதில் ரவிக்கு தடை இல்லை என்று தீர்ப்பளித்து இருந்த நிலையில் இது குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது சம்பந்தப்பட்ட நிறுவனம். இதையடுத்து இந்த படத்தின் டைட்டிலை ரவி பயன்படுத்தக் கூடாது என இடைக்கால தடை விதித்துள்ளது டில்லி உயர் நீதிமன்றம்
இந்த நிலையில் ரவி தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட விளக்கத்தில், “சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஆல்கஹால் தயாரிப்புகளை படத்தில் விளம்பரப்படுத்தச் சொல்லி வற்புறுத்தினார்கள். அது ஏற்றுக் கொள்ள முடியாதது. அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். அதனை தொடர்ந்து தான் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இருந்தாலும் நவம்பர் 21க்கு பிறகு இது குறித்து ஒரு நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார்.