ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி
தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் பிரபலமான நடன இயக்குனராக இருப்பவர் ஜானி மாஸ்டர். அதேசமயம் கடந்த வருடம் பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரியில் சிக்கி கைதாகி சிறைக்குச் சென்று ஜாமினில் வெளிவந்துள்ளார். இந்த நிலையில் தற்போது ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் பெத்தி படத்திலிருந்து சிக்ரி சிக்ரி பாடல் வெளியானது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த சிக்ரி பாடலுக்கு ஜானி மாஸ்டர் தான் நடனம் அமைத்துள்ளார்.
ஏ.ஆர் ரஹ்மான் இசையைப் பார்த்து வளர்ந்த நான் அவர் இசையமைத்த பாடலுக்கே நடனம் அமைத்திருப்பது என்னுடைய பாக்கியம் என்று ஏ.ஆர் ரஹ்மானுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதேசமயம் இப்படி பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவருடன் ஏ.ஆர் ரஹ்மான் எப்படி பணியாற்றலாம் என்று சிலர் விதண்டாவாதமான கேள்விகளை சோசியல் மீடியாவில் எழுப்பி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக வைரமுத்து பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானபோது அவருடன் இணைந்து பணியாற்றுவதையே ஏ.ஆர் ரஹ்மான் தவிர்த்து விட்டார். ஆனால் இப்போது இப்படி ஒரு குற்றச்சாட்டுக்கு ஆளான நபருடன் அவர் எப்படி பணியாற்றலாம்.. சின்மயி போன்றவர்கள் இப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை. ஒருவேளை ஏ.ஆர் ரஹ்மான் என்பதாலா என்றும் கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சின்மயி சம்பந்தப்பட்ட நபருக்கு அளித்துள்ள பதிலில் கூறும்போது, “மனம் போன போக்கில் வாய்க்கு வந்ததை பேசாதீர்கள். இது குறித்து ஏ.ஆர் ரஹ்மானிடம் கேட்டபோது பாடலுக்கு யார் நடனம் அமைக்கிறார்கள் என்கிற விஷயம் எல்லாம் தனக்கு தெரியாது என்று கூறினார். எல்லா நேரத்திலும் எல்லா விஷயத்தையும் இப்படி பொருத்தி பார்க்க கூடாது” என்று கூறியுள்ளார்.