உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...!

வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...!

தமிழ் சினிமாவில் தன்னுடைய திரையுலகப் பயணத்தை 2026 பொங்கலுக்கு வெளியாகும் 'ஜனநாயகன்' படத்துடன் முடித்துக் கொள்வதாக விஜய் அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சினிமாவைத் துறந்து தீவிர அரசியலில் இறங்குகிறார்.

ஜனநாயகன் - பராசக்தி சண்டை
அவரது கடைசி படமான 'ஜனநாயகன்' படம் ஜனவரி 9ம் தேதி வெளியாகிறது. அதற்கடுத்த நாள் ஜனவரி 10ம் தேதி சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் பலர் நடித்துள்ள 'பராசக்தி' படம் வெளியாகிறது. வேண்டுமென்றே 'பராசக்தி' படத்தை அந்தத் தேதியில் வெளியிடுவதாக விஜய் ரசிகர்கள் சிவகார்த்திகேயன் மீது கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

10 படங்கள் வந்த காலம் உண்டு
தமிழ் சினிமா வளர்ந்து வந்த காலத்திலிருந்து இன்று வரையிலும் பொங்கல், தீபாவளி, வருடப்பிறப்பு, சுதந்திர தினம், ஆயுத பூஜை போன்ற விசேஷ நாட்களில் பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும். பத்து படங்கள் கூட அப்படி போட்டி போட்டு வெளியான நாட்கள் உண்டு. ஆனால், விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்துடன் வேறு எந்த படமும் போட்டிக்கு வரக் கூடாது என்பது என்ன ஒரு மனநிலை.

விஜய் தமிழ் சினிமாவில் ஒரு கமர்ஷியல் நடிகர். ரசிகர்களை நன்றாக என்டர்டெயின் செய்தவர். இதுவரை அவர் நடித்த படங்களில் சிறப்பான படம், சமூகக் கருத்துக்களைச் சொன்ன படம் என எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஏதோ ஒன்றிரண்டு படங்களில் சில கருத்துக்களை போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போயிருப்பார், அவ்வளவுதான்.

விஜயகாந்த் உடன் போட்டியிட்டது நினைவில்லையா
விஜய்யுடன் எப்படி சிவகார்த்திகேயனுடன் போட்டியிடலாம் என்கிறவர்களுக்கு அதே சமூக வலைத்தளங்களில் பலரும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். விஜய்யின் ஆரம்ப காலத்தில் அவரைக் கை கொடுத்து தூக்கிவிட்டவர் விஜயகாந்த்.



விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்தார் விஜயகாந்த். 'செந்தூரபாண்டி' என்ற அந்தப் படம் 1993ல் வெளிவந்தது. 1992ல் 'நாளைய தீர்ப்பு' படத்தில் அறிமுகமான விஜய்க்கு அந்த அறிமுகப் படமே தோல்வியகாத்தான் அமைந்தது. அதன்பின் இரண்டாவதாக வெளிவந்த 'செந்தூரபாண்டி' படம் அவரை மூலை முடுக்குகளில் எல்லாம் கொண்டு போய் சேர்த்தது. அதன் பின்பு, 'ரசிகன், விஷ்ணு, கோயமுத்தூர் மாப்ளே' என இளம் ரசிகர்களுக்கான சில கமர்ஷியல் வெற்றிகளைக் கொடுத்து விக்ரமன் இயக்கிய 'பூவே உனக்காக' படம் மூலம் அனைவருக்கும் பிடித்த ஒரு நடிகராக மாறினார் விஜய்.

தன்னை மூலை முடுக்குகளில் கொண்டு போய் சேர்த்த விஜயகாந்த்துடன் கூட பிற்காலங்களில் போட்டியாக தனது படத்தை வெளியிட்டார் விஜய். ஆனால், அதற்காக அப்போது, விஜய் மீது எந்த கோபத்தையும் வெளிப்படுத்தவில்லை விஜயகாந்த்.



1996 பொங்கலுக்கு விஜயகாந்த் நடித்த 'தாயகம்' படத்துடன் விஜய்யின் 'கோயமுத்தூர் மாப்ளே', 1997 பொங்கலுக்கு விஜயகாந்த் நடித்த 'தர்மசக்கரம்' படத்துடன் விஜய்யின் 'காலமெல்லாம் காத்திருப்பேன்' படமும், 2000 பொங்கலுக்கு விஜயகாந்த் நடித்த 'வானத்தைப் போல' படத்துடன் விஜய்யின் 'கண்ணுக்குள் நிலவு', 2001 பொங்கலுக்கு விஜயகாந்த் நடித்த 'வாஞ்சிநாதன்' படத்துடன் விஜய்யின் 'ப்ரண்ட்ஸ்', 2001 தீபாவளிக்கு விஜயகாந்த் நடித்த 'தவசி' படத்துடன் விஜய்யின் 'ஷாஜகான்', 2002 தமிழ்ப் புத்தாண்டுக்கு விஜயகாந்த் நடித்த 'ராஜ்ஜியம்', படத்துடன் விஜய்யின் 'தமிழன்', 2002 தீபாவளிக்கு விஜயகாந்த் நடித்து வெளிவந்த 'ரமணா' படத்துடன் விஜய்யின் 'பகவதி', 2003 பொங்கலுக்கு விஜயகாந்த் நடித்த 'சொக்கத் தங்கம்' படத்துடன் விஜய்யின் 'வசீகரா' படமும் வெளிவந்துள்ளன.

பிறநடிகர்களுடன் போட்டி
கடந்த வருடங்களில் மற்ற நடிகர்களுடன் போட்டி போட்டு வெளியான விஜய் படங்கள். குறிப்பாக 90களில் பார்த்தால் அப்போதைய முன்னணி நடிகர்களுடன் விஜய், அஜித் படங்களும் கூட போட்டி போட்டு வெளியாகி உள்ளன.

1996 பொங்கல் தினத்தில் அஜித்தின் 'வான்மதி', விஜய்யின் 'கோயமுத்தூர் மாப்ளே', 2005 பொங்கலுக்கு சரத்குமார் நடித்த 'ஐயா', தனுஷ் நடித்த 'தேவதையைக் கண்டேன்', விஜய் நடித்த 'திருப்பாச்சி', 2007 பொங்கலுக்கு அஜித் நடித்த 'ஆழ்வார்', விஜய் நடித்த 'போக்கிரி', 2014 பொங்கலுக்கு அஜித் நடித்த 'வீரம்', விஜய் நடித்த 'ஜில்லா', 2023 பொங்கலுககு அஜித் நடித்த 'துணிவு', விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய படங்களும் போட்டியாகத்தான் வெளிவந்தன.



2006 பொங்கலுக்கு கருணாநிதி கதை, வசனம் எழுதிய 'பாசக்கிளிகள்' படத்துடன் விஜய் நடித்த 'ஆதி' படமும், 2011 பொங்கலுக்கு கருணாநிதி கதை, வசனம் எழுதிய 'இளைஞன்' படத்துடன் விஜய் நடித்த 'காவலன்' படமும் வெளிவந்தது.

கடந்த ஒரு சில வருடங்களில் விஜய் நடித்த சில படங்கள் மற்ற நடிகர்களுடன் போட்டியாகவும், சில வருடங்களில் தனியாகவும் வந்துள்ளன.

படம் நன்றாக இருந்தால் ஜெயிக்கும்
சினிமா என்பது ஒரு வியாபார போட்டி நிறைந்த உலகம். எப்போது யார் படத்திற்கு வரவேற்பு இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. இந்த 2025ம் வருடத்தில் கூட ஓடும் என்று எதிர்பார்க்கப்பட்ட படங்கள் படுதோல்வியும், ஓடுமா என்ற சந்தேகத்தை எழுப்பிய சில படங்கள் வெற்றி பெற்று வசூலைக் குவித்ததும் நடந்துள்ளது.

எத்தனை போட்டிகள் வந்தாலும் மக்கள் எந்தப் படத்தைப் பற்றி நல்ல விதமாகக் கேள்விப்படுகிறார்களோ அந்தப் படத்தைத் தேடி வந்து பார்ப்பார்கள். விஜய் நடித்து வெளிவர இருக்கும் 'ஜனநாயகன்' படத்திற்கும் அதேதான் நிலைமை, சிவகார்த்திகேயன் நடித்து வெளிவர இருக்கும் 'பராசக்தி' படத்திற்கும் அதேதான் நிலைமை.

பல கோடி எடுத்து உருவாக்கப்பட்ட 'அவதார் 3' படத்திற்கே, இந்தியாவில் இப்போது என்ன நிலை என்பதை இந்த சினிமா உலகம் அறியும். வர இருக்கும் பொங்கல் படங்களில் மட்டுமல்ல அடுத்து வருடம் படங்களிலும் ஹீரோக்களின் 'கதாநாயக அவதாரம்' கதையுடன் சேர்ந்து இருந்தால் மட்டுமே 'அமோக வெற்றி', இல்லையென்றால் 'எந்த ஆதரவும்' காப்பாற்ற முடியாது என்பதுதான் நூறு சதவீத உண்மை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (3)

angbu ganesh, chennai
2025-12-30 11:56:52

என்னது அணிலின் கடைசி படமா காமெடி பண்ணாதீங்க சார் பெரிய சாதன பண்ணிட்டார் ஊற ஏமாத்தி மெஷினரி பணத்தை வெள்ளையாக்கி பொய்யான வசூலை கட்டியவன் அவன் அரசியலுல அவன் தில்லுமுல்லு செல்லுபடி ஆகாது


pck
2025-12-28 15:06:55

போட்டி தவறில்லை ஆனால் இது விஜய் கடைசி படம், அதனால் கொஞ்சம் விலகி நிற்பது சிறப்பு


tamiloli
2025-12-28 09:06:59

Everyone releases their movie during festivals, it is a normal thing