உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'சைபர் அட்டாக்' செய்யும் விஜய் ரசிகர்கள்

'சைபர் அட்டாக்' செய்யும் விஜய் ரசிகர்கள்

விஜய் நடித்த 'ஜனநாயகன்' படம் ஜனவரி 9ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஜனவரி 14ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட சிவகார்த்திகேயன் நடித்த 'பராசக்தி' படம் திடீரென ஜனவரி 10ம் தேதி வெளியாகும் என்று மாற்றி அறிவிக்கப்பட்டது.

வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் கேட்டுக் கொண்டதால் படத்தை முன்னரே மாற்றினோம் என 'பராசக்தி' தரப்பில் சொன்னார்கள். இருந்தாலும், 'ஜனநாயகன்' படத்திற்குப் போட்டியாக 'பராசக்தி' படத்தை வெளியிடுகிறார்கள் என அன்று முதலே 'பராசக்தி' படத்தையும், அதன் நாயகன் சிவகார்த்திகேயனையும் சமூக வலைத்தளங்களில் மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

ஒரு கட்டத்திற்கு மேல், சிவகார்த்திகேயனின் குடும்பத்தினர், மகள் என எக்ஸ் தள ஸ்பேஸில் கூட சிலர் அருவெறுப்பாக பேசியதாக சில ஆடியோக்கள் பகிரப்பட்டது.

இந்நிலையில் 'பராசக்தி' படம் வெளிவந்த நாளிலிருந்து அந்தப் படம் படுதோல்வி என்றும் தியேட்டர்களில் ஆளே இல்லை என்றும், ஆன்லைன் டிக்கெட் இணையதளத்தில் படத்திற்கு 10க்கு 1 என ரேட்டிங் கொடுத்தும் படம் மீது 'சைபர் அட்டாக்' நடத்தி வருகிறார்கள்.

இம்மாதிரியான அட்டாக்கிலிருந்து தப்பிக்கத்தான் கடந்த மாதம் வெளிவந்த கன்னடப் படங்களான 'தி டெவில், 45, மார்க்' இன்று வெளியாகும் தெலுங்குப் படமான 'மன ஷங்கர வரபிரசாத் காரு' ஆகிய படங்களுக்கு ஆன்லைன் டிக்கெட் புக்கிங் இணையதளத்தில் 'ரேட்டிங்' எதையும் வெளியிடக் கூடாது என நீதிமன்றத் தடை உத்தரவு வாங்கினர்.

இந்நிலையில் 'பராசக்தி' படத்திற்கு இம்மாதிரியான வேலைகளை விஜய் ரசிகர்கள் செய்வது குறித்து, அவற்றிற்கான ஆதாரத்துடன், படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் ராம்நாத் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“உங்கள் படத்துடன் சேர்ந்து எங்கள் படம் வெளியிடுவது என்பதால், எங்கள் படத்தை சீர்குலைக்க உங்களுக்கு உரிமை இல்லை. நாங்கள் முதலில் எங்கள் வெளியீட்டு தேதியை அறிவித்தோம். உங்கள் படத்தை தடுக்க நாங்கள் முயற்சித்தோமா ? ஒருபோதும் இல்லை. தடைகளை கடக்க நான் ஒவ்வொரு நாளும் சென்னை மற்றும் மும்பையில், CBFC அலுவலகத்தில் இருந்தேன். உங்கள் குழு போலவே நாங்களும் சென்சார் பிரச்னைகளை சமாளித்தோம். வெளியீட்டுக்கு 18 மணி நேரத்திற்கும் குறைவாக எங்களுக்கு அது கிடைத்தது. எதிர்மறை விமர்சனங்கள், பழைய வீடியோக்களை பயன்படுத்துதல், மக்களை செலுத்துதல், தியேட்டர்களில் அரசியல் கோஷங்கள் கத்துதல், BMS மதிப்பீடுகளை குழப்புதல். இது போட்டி அல்ல.

கடந்த ஆண்டு ஒரு பெரிய படத்திற்கு நீங்கள் இதையே செய்தீர்கள். ஒரு சினிமா ரசிகனாக பேசுகிறேன், இது நம்மில் யாருக்கும் ஆரோக்கியமானது அல்ல. 'பராசக்தி' என்பது ஒரு மாணவர் இயக்கம் பற்றியது, அதை நாம் தமிழர்கள் பெருமையுடன் கொண்டாட வேண்டும். எங்கள் மாணவர்கள் செய்தது போலவே நாங்கள் இதை எதிர்த்து போராடுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !