ஜனநாயகன் வராதது வருத்தம்: 'ஜிப்ஸி'யும் சென்சாரால் பாதிக்கப்பட்டது: நடிகர் ஜீவா
நிதிஷ் சஹதேவ் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் 'தலைவர் தம்பி தலைமையில்' என்ற படம், இந்த மாதம் இறுதியில் ரிலீஸ் ஆவதாக இருந்தது. 'ஜனநாயகன்' பட ரிலீஸ் தள்ளிப்போனதால் முன்கூட்டியே, அதாவது ஜனவரி 15ம் தேதி வெளியாகிறது. படம் குறித்து ஜீவா பேசியது:
''மலையாளத்தில் ஹிட்டான 'பாலிமி' என்ற படத்தை இயக்கியவர் நிதிஷ். அதில் பசில் ஜோசப் ஹீரோவாக நடித்தார். அந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் கூட நான் நடிப்பதாக இருந்தது. அது நடக்கவில்லை. இந்த படம் பக்கா காமெடி படம். ஒரு திருமணம், ஒரு நாள் இரவில் நடக்கும் நிகழ்வு என கதை செல்கிறது. நானே இந்த படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறேன். கம்பம் அருகே செட் அமைத்து படப்பிடிப்பு நடித்தினோம். பெரும்பாலும் இரவு நேர படப்பிடிப்பு என்றாலும், குடும்பம் மாதிரி பணியாற்றினோம்.
நான் ஒரு தயாரிப்பு நிறுவன குடும்பத்தில் இருந்து வந்து இருக்கிறேன். சின்ன படமோ, பெரிய படமோ 45 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிடுவது நல்லது. இல்லாவிட்டால் வட்டி தொகை அதிகமாகி அது பாதிப்பை ஏற்படுத்தும். அந்த அனுபவத்தில் தலைவர் தம்பி தலைமையில் படத்தை முடித்து இருக்கிறோம். இதுவரை அப்பா பாணியில் நானும் ஏகப்பட்ட புதுமுக இயக்குனர்களை உருவாக்கி உள்ளேன். அடுத்து ராஜேஷ் இயக்கும் படம், 'பிளாக்' பட இயக்குனரின் படம், இன்னொரு படம் என 3 படங்களில் நடிக்கிறேன்.
தலைவர் தம்பி தலையில் படத்தில் எனக்கு ஜோடி கிடையாது. அதற்கு காரணம் இருக்கிறது. அது அடுத்த பாக தொடர்ச்சியாக இருக்கலாம். தம்பி ராமையா இதில் சிறப்பாக நடித்து இருக்கிறார். ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாதது வருத்தம். எங்கள் நிறுவனத்துக்கு விஜய் சார் பல படங்கள் நடித்துள்ளார். அவர் படம் எப்போது வந்தாலும் கொண்டாட்டம்தான். அவர் மீண்டும் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். அந்த படம் வராததால் என் படம் ஜனவரி 30க்கு பதில், ஜனவரி 15ல் இந்த படம் வருகிறது.
ஜனநாயகன் படத்தை போலவே ராஜூமுருகன் இயக்கத்தில் நான் நடித்த 'ஜிப்ஸி' படம் கடுமையான சென்சார் பிரச்னையை சந்தித்தது. 48 கட் கொடுத்து, பல இடங்களில் கலரை நீக்கி, பிளாக் அண்ட் ஒயிட் மாதிரி எங்களுக்கு கொடுத்தார்கள். என்னைதான் பர்ஸ்ட் செய்தார்கள். அந்த படத்தை ரிலீஸ் செய்யும்போது கொரோனா வந்துவிட்டது. ரொம்பவே பாதிக்கப்பட்டோம்''. இவ்வாறு அவர் பேசினார்.