பார்டர் 2 வில் அக்ஷய் கன்னா காட்சிகள் இடம் பெறாதது ஏன்? தயாரிப்பாளர் விளக்கம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹிந்தியில் சன்னி தியோல், வருண் தவான் நடிப்பில் அனுராக் சிங் இயக்கத்தில் பார்டர் 2 திரைப்படம் வெளியானது. கடந்த 1997ல் வெளியான பார்டர் படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் வெளியாகி உள்ளது. வெளியான மூன்று நாட்களிலேயே 130 கோடியை தாண்டி இந்த படம் வசூலித்துள்ளது. கடந்த மாதம் ரன்வீர் சிங் மற்றும் அக்ஷய் கன்னா நடிப்பில் வெளியான துரந்தர் திரைப்படம் ஏற்கனவே ஆயிரம் கோடியை தாண்டி வசூலித்துள்ளது. அந்த படத்தில் ரன்வீர் சிங்கை விட நடிகர் அக்ஷய் கன்னா ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பெயர் வாங்கியுள்ளார். தற்போது ஹிந்தியில் அவரது மார்க்கெட் ரொம்பவே கூடியுள்ளது.
அதேசமயம் பார்டர் முதல் பாகத்தில் நடித்திருந்த அவர் இந்த இரண்டாம் பாகத்தில் இடம்பெறாதது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம்தான். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் பூஷன் குமார் இது குறித்து ஆச்சரிய தகவல் ஒன்றை சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். “சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் அக்ஷய் கன்னா சம்பந்தப்பட்ட காட்சிகளும் இந்த படத்தில் இடம்பெற வேண்டும் என்று கடந்த டிசம்பர் மாதம் தான், அதுவும் சொல்லப்போனால் துரந்தர் படம் வெளியான பிறகு தான் அவருக்கான காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஆனால் துரந்தர் படத்தில் அவரது கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்த வரவேற்பை எங்களது துரந்தர் படத்தின் வெற்றிக்காக பயன்படுத்திக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை. அது சரியாக இருக்காது என்று நினைத்தோம். அதனால் தான் பார்டர் 2 படத்தில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம் பெறாமல் போனது” என்று கூறியுள்ளார்.