இனி பாட மாட்டேன் : பிரபல பாடகர் அரிஜித் சிங் திடீர் அறிவிப்பு
ஹிந்தி, பெங்காலி, தெலுங்கு, தமிழ், மராத்தி, கன்னடம் உள்ளிட்ட சில மொழிகளில் 700க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர் பின்னணிப் பாடகர் அரிஜித் சிங். 2011 முதல் திரைப்படங்களில் பாடி வருகிறார். இந்நிலையில் நேற்று தனது சமூக வலைதளத்தில் இனி பாடமாட்டேன் என திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
“அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இத்தனை ஆண்டுகளாகக் கேட்பவர்களாக எனக்கு இவ்வளவு அன்பு கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். இனிமேல் பின்னணி பாடகராக எந்த புதிய பணிகளையும் ஏற்கப் போவதில்லை என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதை நான் நிறுத்துகிறேன். அது ஒரு அற்புதமான பயணமாக இருந்தது,” எனத் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த திடீர் அறிவிப்பு, அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
பல இனிமையான பாடல்களைப் பாடியுள்ளவர் அரிஜித். தமிழில் 'புகழ்' படத்தில் 'அடடா என்ன அழகு…' பாடலைப் பாடியதன் மூலம் தமிழில் அறிமுகமானார். அடுத்து, '24' படத்தில் 'நான் உன் அழகினிலே…' என்ற பாடலையும் பாடியுள்ளார். இப்பாடல் யு டியூப் தளத்தில் 50 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
இப்பாடலை அவருடன் இணைந்து பாடிய சின்மயி, அரிஜித் பற்றி, “அவர் பிரிதம் சாருக்காக என் பாடலைப் பதிவு செய்தபோது நான் அரிஜித் சிங்கை சந்தித்தது நினைவிருக்கிறது. மேலும் அவர் பாலிவுட்டை ஆளவில்லை என்று அவரிடம் நான் சொன்னது நினைவிருக்கிறது. அப்போது 'தும் ஹி ஹோ' வெளியாகவில்லை. அவர் மிகவும் பிரபலமான பாடகராக ஆன பிறகு அவருடன் சில முறை அவருடன் பாடியுள்ளேன், எதுவும் மாறவில்லை.
அவர் எனக்கு பிடித்த இசைக்கலைஞர்களில் ஒருவர், பாடகர்களில் ஒருவர், மற்றும் ஒட்டுமொத்தமாக, நான் சந்தித்தவர்களில் மிகச் சிறந்தவர்களில் ஒருவர், மேலும் தைரியமாகச் சொல்கிறேன், ஆன்மிக ரீதியாக வளர்ந்த மனிதர்களில் ஒருவர்.
அவர் எப்போதும் உயர்ந்த அழைப்பிலிருந்து வேலை செய்து செயல்படுபவர் என்று நான் உணர்ந்தேன்; அவர் தனக்காக இசைக்கலைஞராக திட்டமிட்டிருப்பது எதுவாக இருந்தாலும் அது தெய்வீகத்திற்கு குறைவில்லாதது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
38 வயதிலேயே பாடுவதை விட்டு விலகும் முடிவை அரிஜித் ஏன் எடுத்தார் என்பதற்கான காரணம் தெரியவில்லை.