மகளின் பள்ளி விழாவில் பங்கேற்க மேக்கப்பை கலைக்காமல் படப்பிடிப்பிலிருந்து ஓடி வந்த ஸ்ரேயா
நடிகை ஸ்ரேயா தமிழில் ரஜினி, விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக பல படங்களில் நடித்தவர். தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் அதே அளவிற்கு வரவேற்பு பெற்று ஒரு குறிப்பிட்ட காலம் வரை முன்னணி நடிகை ஆகவும் வலம் வந்தார். பின்னர் 2018ல் ஆன்ட்ரூ கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த ஸ்ரேயா தற்போது செலெக்ட்டிவ்வான படங்களை தேர்ந்தெடுத்து வருடத்திற்கு இரண்டு படங்களிலாவது நடித்து வருகிறார்.
இப்போது ஹிந்தியில் உருவாகி வரும் 'திரிஷ்யம் 3' படத்தில் நடித்து வருகிறார் ஸ்ரேயா. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் தனது குழந்தைகளுக்காக எந்த அளவிற்கு நேரம் ஒதுக்குகிறேன் என்பதை குறித்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “என்னதான் ஒரு நடிகையாக இருந்தாலும் ஒரு குழந்தைக்கு தாய் என்பதை நான் மறந்துவிட முடியாது. அப்படி ஒரு முறை எனது மகளின் பள்ளிக்கூடத்தில் ஸ்போர்ட்ஸ் டே விழா நடைபெறுகிறது என்பதால் என் மகள் கட்டாயம் நான் கலந்து கொள்ள வேண்டும் என கூறியிருந்தார். சரியாக அதேநாளில் எனக்கு ஒரு படப்பிடிப்பு இருந்தது. இருந்தாலும் கிடைத்த இரண்டு மணி நேர இடைவெளியில் என்னுடைய கேரக்டர் மேக்கப் கூட கலைக்காமல் அதே கெட்டப்பில் பள்ளிக்கூடத்திற்கு சென்று அந்த விழாவில் கலந்து கொண்டேன்.
கதைப்படி அது எனக்கு சீரியஸான கதாபாத்திரம் என்பதால் பார்க்கும் அனைவருமே என்னிடம் எதற்காக இவ்வளவு சீரியஸாக இருக்கிறீர்கள் என்று கூட கேட்டார்கள். அவர்களுக்கு நான் என்ன சொல்வது ? இப்படித்தான் சில்லியாக இருந்தாலும் குழந்தைகளுக்காக சில விஷயங்களை செய்ய தோன்றுகிறது” என்று கூறியுள்ளார் ஸ்ரேயா.