லோகேஷ் கனகராஜின் உதவியாளர் டைரக்ஷனில் நடிக்கும் ராம் பொத்தினேனி
தெலுங்கில் முன்னணி ஹீரோக்களின் ஆதிக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை வைத்துக்கொண்டு தனது திரையுலக பயணத்தை கவனமாக மேற்கொண்டு வருகிறார் நடிகர் ராம் பொத்தினேனி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் நடிப்பில் வெளியான 'ஆந்திரா கிங் தாலுகா' படம் ஓரளவு வரவேற்பை பெற்றாலும் கூட பாக்ஸ் ஆபிஸில் சோபிக்க தவறியது. இதனால் தனது அடுத்த படத்தை தேர்ந்தெடுக்க கிட்டத்தட்ட ஆறு மாதம் இடைவெளி எடுத்துக் கொண்ட ராம் பொத்தினேனி பலரிடம் கதை கேட்டு வந்தார்.
இறுதியாக லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஒருவரின் கதையில் ரொம்பவே இம்ப்ரஸ் ஆகி தனது அடுத்த பட டைரக்டராக அவரை முடிவு செய்துள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இதற்கு முன்னதாக தமிழ் இயக்குனரான லிங்குசாமியின் டைரக்ஷனில் 'தி வாரியர்' என்கிற படத்தில் ராம் பொத்தினேனி நடித்திருந்தாலும் அந்த படம் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. அந்த வகையில் லோகேஷ் கனகராஜின் சீடர் ராம் பொத்தினேனிக்கு ஒரு திருப்புமுனை வெற்றியை தருவார் என எதிர்பார்க்கலாம்.