நெக்ஸ்ட்… ரெஸ்ட்... : என்னது இந்த இயக்குநர்கள் படம் இல்லாம இருக்காங்களா?
சினிமா எப்போதும் தனக்குள் ஆச்சர்யங்களை ஒளித்து வைத்திருக்கும் பரமபத விளையாட்டு. முதல் படத்தின் ஹவுஸ்புல் காட்சி அறிமுக இயக்குநர் ஒருவரை அவரது வாழ்வின் உச்சத்தில் கொன்டுபோய் நிறுத்திவிடும். இன்னொரு பக்கம் எத்தனையோ ஹிட்கள் கொடுத்த இயக்குநரை ஒரு முரட்டு தோல்வி வீட்டின் மூலையில் உட்கார வைத்துவிடும். அதாவது வடிவேலு ஸ்டைலில் சொன்னால் நெக்ஸ்ட்டு ரெஸ்ட்டுதான்.
ஷங்கர்
அப்படி ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருப்பவர்களில் ,இப்போது தமிழ் சினிமாவில் டாப் டென்னில் இருப்பவர் ஷங்கர்தான். தனது முதல் படமான ஜென்டில்மேனில் தொடங்கி தொடர்ந்து வெற்றிகளை மட்டுமே ருசித்தவர். ஹிந்தியிலும் முதல்வன் படத்தை 'நாயக்' என்று ரீமேக் செய்து அங்கேயும் வெற்றிக்கொடி நாட்டியவர். ஆனால் 2024ல் ரிலீஸான 'இந்தியன் 2'வுக்குப் பின்னர் பெரும் சரிவைக் கண்டார். தெலுங்கு, தமிழில் அவர் இயக்கிய 'கேம் சேஞ்சர்' இவரை இன்னும் கொஞ்சம் டேஞ்சர் ஜோனுக்குள் தள்ளியது. அடுத்த ரிலீஸுக்குக் காத்திருக்கும் 'இந்தியன் 3' வெளியாகுமா என கமல், ஷங்கர் இருவருக்குமே தெரியாத நிலையில், கடந்த இரு வருடங்களாக புதிய படம் எதையும் கமிட் பண்ண முடியாமல் தவித்து நிற்கிறார் ஷங்கர்.
சேரன்
அடுத்த காத்திருப்பாளர் சேரன். 'பாரதி கண்ணம்மா', 'பொற்காலம்', 'வெற்றிக் கொடிகட்டு' என்று அடுத்தடுத்து மசாலா ஹிட்களைக் கொடுத்த சேரனின் முக்கியமான இரு படங்கள் 'ஆட்டோகிராப்', 'தவமாய் தவமிருந்து'. அடுத்து 'மாயக் கண்ணாடி'யில் தன் முகத்தைத் தொலைத்தவர் பின்னர் கரையேறி வரவேயில்லை. கடந்த 20 ஆண்டுகளில் அவர் இயக்கிய நான்கு படங்களுமே வசூல் ரீதியான தோல்வி என்பதைத் தாண்டி அவை சேரனின் படங்களாகவே கூடிவரவில்லை. அடுத்து டாக்டர் ராமதாஸின் பயோபிக்கை இவர் இயக்குவதாக இருந்து அது டிராப் ஆகியிருக்கிறது. இப்போது தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை இவர் தொகுத்து வழங்க உள்ளார்.
கவுதம் மேனன்
கவுதம் வாசுதேவ் மேனன். 2001இல் மின்னலாக அறிமுகமான கவுதம் இந்த 25 ஆண்டுகளில் 23 படங்களை இயக்கியிருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கும். 'காக்க காக்க', 'வேட்டையாடு விளையாடு', 'வாரணம் ஆயிரம்'களுக்கு மத்தியில் 'நீதானே என் பொன் வசந்தம்', போன்ற ஓடாத நல்ல படங்களைக் கொடுத்தவரும் கூட. விக்ரமுடன் 'துருவ நட்சத்திரம்' படத்துக்குக் கூட்டணி சேர்ந்த பிறகு கவுதமுக்கு நட்சத்திர பலன்கள் நெகடிவ்வாக திரும்பின. இந்த கேப்பில் நல்ல சம்பளத்துடன் தொடர்ந்து நடிப்பு வாய்ப்புகள் வருவது அவருக்கு ஆறுதல்.
ஏ.ஆர். முருகதாஸ்
அடுத்த முக்கிய விக்கெட் ஏ.ஆர். முருகதாஸ். பான் இந்திய படங்க்கள் பிரபலாகும் முன்பே ஹிந்தியிலும் தெலுங்கிலும் கோலோச்சியவர். அதே ஹிந்தியிலும் தெலுங்கிலும் மட்டுமல்ல தமிழில் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய மதராஸியும் சுமாராகப் போனதால் அடுத்த படம் இழுபறியாகியிருக்கிறது. சிம்புவை வைத்து துவங்கவிருப்பதாக இருந்த படமும் டிராப் என்பதால் சன்னி தியோலை வைத்து ஒரு ஹிந்திப்படம் இயக்க அடிக்கடி மும்பை பறந்துகொண்டிருக்கிறார்.
லிங்குசாமி
அடுத்த ஆச்சர்யம் லிங்குசாமி. பத்துப் படங்கள் இயக்கி அதில் 4 மாபெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்திருந்தாலும் லிங்குசாமியும் ஒரு ஒன் பிலிம் ஒண்டர்தான். ஏனெனில் லிங்கு தன் வாழ்நாளில் 'ஆனந்தம்' போன்றதொரு படத்தை இன்னொருமுறை இயக்கவில்லை என்பது மட்டுமல்ல, அவர் அதற்கான முயற்சிகளிலும் கூட ஈடுபடவில்லை. காரணம் அவரது இரண்டாவது படமும் மிகச் சிறந்த மசாலா படமுமான 'ரன்'னில் 'சம்பாதித்த பெயர். இயக்குநர்களுக்கு மசாலாப்பட வெற்றி என்பது உச்சபட்ச போதை. அதிலிருந்து அவர்கள் எப்போதுமே மீளமுடியாது. கடந்த சில வருடங்களாக அவ்வப்போது சில படங்க்களைத் தொடங்கி அவை டிராப் ஆன நிலையில் இசையமைப்பாளர் வித்யாசாகர் மகனை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதாக தகவல்.
பாலா
இந்தப்பட்டியலில் இவருமா இருக்கிறார் என்று நம்ப முடியாத நபர் பாலா. 'சேது' முதல் நந்தா' வரை இவருக்கிணை லேது என்று பேசப்பட்டவர், அப்புறம் மெல்ல சறுக்கலானார். கடைசியாக வந்த வணங்கானுக்குப் பிறகு அடுத்த படத்தை முடிவு செய்ய முடியாமல் 'எங்கே செல்லும் இந்தப் பாதை என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.
இவர்களும் தான்...
இந்த லிஸ்டில் மேலும் சேர்த்துக் கொள்ளும்படியாக… எதைச் செய்தாலும் வித்தியாசமாகத்தான் செய்வேன் என்கிற பார்த்திபன், 'ஏங்க என்னங்க நடக்குது இங்க… நல்ல படம் எடுத்தா ஏன் பாக்க மாட்டேங்குறீங்க?' என்று சவுண்ட் விட்டபடியே ரொம்ப நாளாக படமே எடுக்காத தங்கர் பச்சான், சொந்தத் தம்பியே கைவிட்டதால், 'எமக்குத் தொழில் நடிப்பு' என்று டிராக் மாறிப்போன செல்வராகவன், அடுத்த படத்துக்காக ஏழு கடல் பதினேழு மலை தாண்டிக் காத்திருக்கும் ராம், விஜய் சேதுபதியை வைத்து இயக்கியிருக்கும் 'ட்ரெயின்' இரண்டு வருடங்களுக்கும் மேலாக எக்மோரின் எட்டாவது பிளாட்பாரத்தை விட்டு நகரவேயில்லை. அந்த 'ட்ரெயின்' நகர்ந்தால் தான் வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும் மிஷ்கின், தமிழகத்தின் பாதி ஊர்ப் பெயர்களில் படம் எடுத்த ஹரி, தரணி, வசந்தபாலன், சிம்புதேவன், ராதா மோகன், பாலாஜி சக்திவேல் என்று இன்னும் சிலரும் இருக்கிறார்கள்.
இவர்களின் பலரின் இந்த வீழ்ச்சிக்கான காரணம் … மார்க்கெட்டில் உள்ள ஏழெட்டு ஹீரோக்களை மட்டும் வைத்து மறுபடி மறுபடி படம் செய்தது. அப்படி இல்லாமல் புதிய முகங்கள் சிலரை அறிமுகப்படுத்தியிருந்தால் இப்படி ரெஸ்ட் எடுக்கும் நிலை ஏற்பட்டிருக்காது.