ஆகாயம் படத்தை இயக்கும் நாகராஜ் : அக்காவாக நடிக்கும் கனிகா
முரளி, சுவலட்சுமி நடித்த தினந்தோறும் படத்தை இயக்கியவர் நாகராஜ். இவர் சற்றே இடைவெளிக்குபின் இயக்கும் படம் ஆகாயம். ஸ்ரீராம் கார்த்திக், ஆலிஷா நடிக்கிறார்கள். இதில் பைவ் ஸ்டார் கனிகா அக்காவாக நடிக்கிறார். அக்கா, தம்பி பாசம்தான் படத்தின் கருவாம். ரகுநந்தன் இசையமைக்கிறார்.
சென்னையில் நடந்த பாடல்கள் வெளியீட்டு விழாவில் கனிகா பேசியது ''இயக்குனர் நாகராஜ் பற்றி பலரும் பலவிதமாக சொன்னார்கள். உண்மையில் அவர் அற்புதமான மனிதர். நான் பல கதைகளை கேட்கிறேன். சில கதைகள் செட்டாகிறது. சில கேரக்டர் வேண்டாம் என நானே சொல்லிவிடுகிறேன். ஆகாயம் கதை கேட்டவுடன் நடிக்க ஓகே சொல்லிவிட்டேன். எப்படி நடிக்கணும், எப்படி பேசணும் என இயக்குனர் அழகாக சொல்லிக் கொடுத்தார். கதை, கேரக்டர்கள் உயிரோட்டமாக இருக்கும். இந்த காலகட்டத்துல குடும்பத்துடன் பார்க்கிற படமாக இருக்கும். அடுத்து அவர் இயக்கும் படத்திலும் நடிக்க ஆசைப்படுகிறேன்'' என்றார்.
சில்லுனு ஒரு காதல் இயக்குனர் கிருஷ்ணா விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தினந்தோறும் நாகராஜ் பற்றி பேசுகையில் 'மின்னலே' படத்தில் நான் இணை இயக்குனர். இவர் வசனகர்த்தா. அந்த காலம் முதல் எங்கள் நட்பு தொடர்கிறது. சில்லுனு ஒரு காதல் படத்தில் மக்கள் ரசித்த சில காட்சிகளை அவர்தான் மெருகேற்றினார்'' என்றார்.