குடிப்பழக்க பாதிப்பை சொல்லும் நல்ல படம்
சி. பிரபு ராம் இயக்கத்தில் டாக்டர் ஏ.ஹரிஷ் கதாநாயகனாகவும், தனலட்சுமி கதாநாயகியாகவும் நடிக்க, செப்டம்பர் 18ம் தேதி வெளியாக உள்ள படம் நல்ல படம்.
மதுவுக்கு அடிமையான ஒருவரை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. அவரின் தாயார் எப்போதும் அவருக்கு ஆதரவாக இருக்கிறார். ஆனால், அவரது சகோதரி குடிப்பழக்கத்தை கடுமையாக எதிர்க்கிறார். அவரது காதலியும்அந்தப் பழக்கத்திலிருந்து மாற்றுவதற்குத் தொடர்ந்து முயற்சி செய்கிறார். இதற்கிடையே, மதுவை விரும்பும் சிலர் ஒன்றிணைந்து ஓர் அமைப்பை உருவாக்கி, அதன் தலைவராகத் அவரை தேர்வு செய்கின்றனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் மதுவுக்கு அரசு தடை விதிப்பதாக அறிவிக்கிறது. இதனால், தனது வாழ்க்கையாக இருந்த மதுவின்றி எப்படி வாழ்வது என்ற மிகப்பெரிய சவாலை அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகிறது. அதன்பிறகு வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத சம்பவங்களும், புதிய சூழலை சமாளிக்க அவர் எதிர்கொள்ளும் நகைச்சுவையான பிரச்சினைகளுமே 'நல்லபடம்'.
மதுவால் தனி நபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் இந்த படம் பேசுகிறது. அதேசமயம் நகைச்சுவை, காதல், சென்டிமென்ட், சமூக விழிப்புணர்வு மற்றும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விஷயங்களும் இருக்கிறது. மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா, ரமா மற்றும் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.