தியேட்டர்களுக்கு மீண்டும் வராத ரசிகர்கள், தவிப்பல் தயாரிப்பாளர்கள்
ADDED : 1717 days ago
தமிழ் சினிமா உலகம் மிகவும் கடுமையான ஒரு காலகட்டத்தில் இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். கடந்த வருடம் கொரானோ தொற்று பாதிப்பால் தியேட்டர்கள் சுமார் ஒன்பது மாதங்கள் மூடப்பட்டன. பின்னர் நவம்பர் மாதம் திறக்கப்பட்டாலும் ஜனவரி மாதம்தான் மக்கள் அதிக அளவில் தியேட்டர்களுக்கு வந்தார்கள்.
அது போலவே தொடர்ந்து வருவார்கள் என எதிர்பார்த்த தயாரிப்பாளர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் கடந்த இரண்டு வாரங்களாக சினிமா ரசிகர்கள் அதிர்ச்சியைத்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பிப்ரவரி 5 மற்றும் பிப்ரவரி 12ம் தேதி ஆகிய நாட்களில் வெளியான படங்களைப் பார்க்க ரசிகர்கள் மிகவும் குறைந்த அளவில்தான் வந்துள்ளனர். அதிலும் கடந்த வாரம் வெளியான 'பாரிஸ் ஜெயராஜ், குட்டி ஸ்டோரி' ஆகிய இரண்டு படங்களுக்கு மட்டுமே ஓரளவிற்கு ரசிகர்கள் வந்துள்ளனர். அந்தப் படங்களுக்கும் பி அன்ட் சி சென்டர்களில் ரசிகர்கள் வராத காரணத்தால் சிலபல காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாம்.
மற்ற படங்களுக்கு முதல் நாளிலேயே ரசிகர்கள் இல்லாத காரணத்தால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. மீண்டும் இப்படி ஒரு நிலைமை தமிழ் சினிமாவிற்கு வரும் என திரையுலகத்தினர் எதிர்பார்க்கவில்லை.
இந்த வாரம் பிப்ரவரி 19ம் தேதி விஷால் நடித்துள்ள 'சக்ரா', கயல் ஆனந்தி நடித்துள்ள 'கமலி பிரம் நடுக்காவேரி' உள்ளிட்ட சில படங்கள் வெளியாக உள்ளன. இந்தப் படங்களுக்காவது ரசிகர்கள் வருவார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.