உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தியேட்டரில் தான் மரியாதை : இயக்குநர் பேரரசு

தியேட்டரில் தான் மரியாதை : இயக்குநர் பேரரசு

ஞான ஆரோக்கியா தயாரித்து, இயக்கியிருக்கும் படம் 'உதிர்'. விதுஷ், சந்தோஷ் சரவணன், மனிஷா ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் மனோபாலா, தேவதர்ஷினி, சிங்கம்புலி, போண்டா மணி, தீப்பெட்டி கணேஷன், தலைவெட்டி முருகன், நெல்லை சிவா, சிசர் மனோகர், முத்துக்காளை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இதன் இசை வெளியீட்டில் பேசிய இயக்குநர் பேரரசு, “தியேட்டரில் திரைப்படங்கள் பார்ப்பதே நல்ல அனுபவம். டூரிங் டாக்கீஸ்களில் படம் பார்த்த அனுபவங்களை மறக்க முடியாது. அப்படிப்பட்ட திரையரங்கங்கள் இன்று காணாமல் போய்விட்ட சூழலில், தற்போது தியேட்டர்களுக்கு புதிய சாபக்கேடு வந்திருக்கிறது. கடலில் பிடிக்கப்பட்ட மீன்களை தான் கடல் மீன் என்போம், ஏரிகளில் பிடிக்கும் மீன்களை ஏரி மீன் என்போம். அதுபோல், தியேட்டர்களில் வெளியானால் தான் அது திரைப்படம். அப்போது தான் திரைப்படங்களுக்கு மரியாதை. ஆனால், தற்போது செல்போனில் படங்கள் வெளியாக தொடங்கியிருக்கிறது. அதனால், திரைப்படங்கள் செல் படங்களாகிவிட்டது.

இந்த நிலை தொடர்ந்தால் திரைப்படங்களுக்கு மட்டும் இன்றி திரை நட்சத்திரங்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் மரியாதை இல்லாமல் போய்விடும். எனவே, திரைப்படங்களை திரையரங்குகளில் மட்டுமே வெளியிட வேண்டும், அதற்கு ரசிகர்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். சூழ்நிலை காரணமாக, ஒடிடி-யில் வெளியிடலாம், ஆனால் அதையே தொடரும் சூழலை உருவாக்க கூடாது. எனவே பெரிய பெரிய தயாரிப்பாளர்கள், நடிகர்கள் திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதற்கான முயற்சியில் இறங்க வேண்டும். அது தான் திரைப்படங்களுக்கு மரியாதை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !