திரையுலகம் சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது . வருகிற 7ம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார். மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் அவருக்கு திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்த இருப்பதாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: திமுக வெற்றி பெறும் ஒவ்வொரு முறையும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன், கருணாநிதிக்கு முதல் பாராட்டு விழாவை திரையுலகம் தான் நடத்தும். இந்த முறையும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், நடிகர் சங்கம், பெப்ஸி என அனைத்தும் இணைந்து புதிய அரசுக்குப் பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம்.
நாளை மறுநாள் தமிழக முதல்வராக பதவியேற்க இருக்கும் மு.க ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் பன்னீர்செல்வம், ஐடிரீம்ஸ் மூர்த்தி எம்.எல்.ஏ, டாக்டர். ஹரிகோவிந்த், மதிவானன், படுர் ரமேஷ் ஆகியோர் இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.