மயிலாடுதுறையில் துலா உற்சவம் நாளை தொடங்குகிறது
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் சுவாமி காவிரி துலா கட்டத்தில் தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இவ்வாண்டு ஐப்பசி மாதம் முதல் நாளான நாளை (18ம் தேதி) துலா உற்சவம், தீர்த்தவாரியுடன் தொடங்குகிறது. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர், அறம் வளர்த்த நாயகி சமேத ஐயாரப்பர், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர், விசாலாட்சி சமேத விஸ்வநாதர் ஆகிய சுவாமிகள் பஞ்சமூர்த்திகளுடன் காவிரியின் இரு கரைகளிலும் எழுந்தருள அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு மாயூரநாதர் கோவில் கும்பாபிஷேக திருப்பணி நடைபெறுவதால் துலா உற்சவத்திற்கு சுவாமி புறப்பாடு கிடையாது. ஆனால் ஐயாறப்பர் கோவில், வள்ளலார் கோவில், காசி விஸ்வநாதர் கோவில்களில் இருந்து பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி, அம்பாள் காவிரி கரைக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.