உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மன்னீஸ்வரர் கோவில் தேரோட்டம்: பக்தர்கள் கோலாகலம்

மன்னீஸ்வரர் கோவில் தேரோட்டம்: பக்தர்கள் கோலாகலம்

அன்னூர்: கோவை அருகே அன்னூரில் பழமையான மன்னீஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

கோவை மாவட்டம், அன்னூரில் 1,100 ஆண்டுகள் பழமையான மேற்றழை தஞ்சாவூர் என்று அழைக்கப்படும் மன்னீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 23ம் ஆண்டு தேர்த் திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவு முக்கிய வீதிகள் வழியாக சுவாமி திருவீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு அருந்தவச் செல்வி உடனமர் மன்னீஸ்வரர் தேருக்கு எழுந்தருளினார். காலை 11:00 மணிக்கு பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், கூனம்பட்டி ஆதீனம் ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகள் உள்ளிட்டோர் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேருக்கு முன்னதாக, சண்டிகேஸ்வரர், விநாயகர், சோமாஸ்கந்தர் ஆகியோர் வீற்றிருக்கும் சிறிய தேர்கள் சென்றன. இசைக்கேற்ப நடனமாடிய குதிரையை பக்தர்கள் பார்த்து ரசித்தனர். தேர் மீது வாழைப்பழம், நிலக்கடலை, பருத்தி விதை ஆகியவற்றை பக்தர்கள் வீசியபடி மன்னீஸ்வரரை வணங்கினர். 20க்கும் மேற்பட்ட இடங்களில் பக்தர்களும், பல்வேறு நிறுவனங்களும், தேர் இழுத்து வந்த பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். பலர் நீர் மோர் வழங்கினர். செண்டை மேளம், ஜமாப் இசை ஆகியவற்றுக்கு பக்தர்கள் ஆடியபடி சென்றனர். தர்மர் கோவில் வீதி, சத்தி ரோடு, மெயின் ரோடு வழியாக மீண்டும் மாலை 5:00 மணிக்கு தேர் கோவிலை அடைந்தது. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !