உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்!

வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்!

மகத்தான செயல்களைச் செய்வதற்காக கடவுள் நம்மைப் படைத்திருக்கிறார். அந்தச் செயல்களை விரைந்து செய்து முடிப்போம். உங்களுக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உங்களுக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன.

எதைச் செய்தாலும் அதன்பொருட்டு மனம், இதயம், ஆன்மா என்று அனைத்தையும் அர்ப்பணித்து விடுங்கள். எதிர்நீச்சல் போடுவதன் மூலம் நிச்சயம் வெற்றி உங்களைத் தேடிவரும்.

எதிர்காலத்தில் நாம் எப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறோமோ, அதை நாம் இப்போதைய செயல்களால் உருவாக்கிக் கொள்ள முடியும்.

நல்ல, தீய எண்ணங்களின் உரிமையாளர்களாக நாம் இருக்கிறோம். எப்போதும் நம்மை நல்ல எண்ணங்களின் கருவி களாக்கிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

சரியான வழியில் செலுத்தப்பட்ட மனம் நம்மைக் காக்கும். அடிமைத் தளையில் இருந்து விடுதலை பெறச் செய்யும்.

தூய்மை,பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு அடிப்படையானவை. இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.

எழுந்திருங்கள். விழித்துக் கொள்ளுங்கள். இனியும் தூங்கவேண்டாம். வாழ்க்கை ஒரு போர்க்களம். ஆனாலும், எல்லாவற்றையும் சாதிக்க வல்ல பேராற்றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கிறது.

மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர உங்களின் அறிவாற்றல் பன்மடங்கு பெருகி விடும். விடாமுயற்சி உடையவன் சமுத்திரத்தையே குடித்துவிடுவான். மலையையும் நொறுங்கிவிழச் செய்யும் வலிமை அவனுக்கு வந்துவிடும்.

லட்சியத்தில் உறுதியான பிடிப்புடன் இருங்கள். யார் என்ன சொன்னாலும் பொருட்படுத்தாதீர்கள். நிச்சயம் ஒருநாள் உலகம் உங்கள் காலடியில் பணிந்து கிடக்கும்.

ஒருகருத்தை எடுத்துக் கொண்டு அதையே வாழ்வின் ஆதாரமாக்கிக் கொள்ளுங்கள். அக்கருத்தை ஒட்டியே வாழ்க்கை நடத்துங்கள். வெற்றியை அடைய இதுவே எளியவழி.

தூய்மையாக இருப்பதும், மற்றவர்களுக்கு நன்மை செய்வதும் தான் எல்லா வழிபாடுகளின் சாராம்சமாகும்.

மற்றவர்களுக்காக நாம் செய்யும் மிகச் சிறிய உழைப்புகூட நமக்குள்ளே இருக்கும் சக்தியை தட்டி எழுப்பிவிடப் போதுமானது.

-முழங்குகிறார் விவேகானந்தர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !