மானாமதுரை வைகை கரை அய்யனார், சோணையா சுவாமி கோயில் வருஷாபிஷேக விழா
மானாமதுரை: மானாமதுரை வைகை கரை அய்யனார், அலங்காரகுளம் சோணையா சுவாமி கோயில் வருஷாபிஷேக விழா மற்றும் சேமங்குதிரை வாகன கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த குலாலர் சமூக நல சங்கத்திற்கு பாத்தியப்பட்ட வைகை கரை அய்யனார், அலங்காரகுளம் சோணையா சுவாமி கோயில் வருஷாபிஷேக விழா மற்றும் கோயில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சேமங்குதிரை வாகனத்திற்கு கும்பாபிஷேகமும் நடை பெற்றது. இதற்காக கோவில் வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு கடந்த 2 நாள்களாக 3 கால பூஜைகள் நடைபெற்று வந்தது.இதனைத்தொடர்ந்து நேற்று காலை பூர்ணாகுதி முடிந்தவுடன் 10:45 மணிக்கு புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி ஊர்வலமாக கொண்டு வந்து புதிதாக கட்டப்பட்ட சேமங்குதிரை வாகனத்திற்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதனைத் தொடர்ந்து அய்யனார்,சோணையா சுவாமிகள் மற்றும் கோயில் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில் மானாமதுரை ஒருங்கிணைந்த குலாலர் சமூக நலக்க சங்க தலைவர் மற்றும் பரம்பரை நிர்வாக அறங்காவலர் காளீஸ்வரன், நிர்வாகிகள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் முன்பாக அன்னதானமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.