உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் திருப்பணிக்கு... ரூ.25 கோடி!

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் திருப்பணிக்கு... ரூ.25 கோடி!

காஞ்சிபுரம் : ஹிந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகளில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், 25 கோடி ரூபாயிலும், செரப்பனஞ்சேரி வீமீசுவரர் கோவில் 7 கோடி ரூபாயிலும் திருப்பணிகள் நடைபெற உள்ளன.

தமிழகத்தில் ஹிந்து சமய அறநிலையத் துறை கோவில்களில் மேற்கொள்ள இருக்கும் அடிப்படை வசதிகள், திருப்பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை, சட்டசபை மானியக் கோரிக்கையில், அமைச்சர் சேகர்பாபு, அறிவித்துள்ளார். அவர் அறிவித்துள்ள அறிவிப்புகளில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் மேற்கொள்ள இருக்கும் திருப்பணிகள் குறித்து பட்டியலிடப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் திருப்பணி செய்வது, கோவில் குளம் சீரமைப்பது, தேர் கொட்டகை அமைப்பது போன்ற பணிகள் இடம் பெற்று உள்ளன. குறிப்பாக, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு, 25 கோடி ரூபாய் மதிப்பிலும், செரப்பனஞ்சேரி வீமீசுவரர் கோவிலுக்கு, 7 கோடியும், அகத்தீஸ்வரர் மற்றும் திருவாலீஸ்வரர் கோவிலுக்கு தலா, 2 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடைபெற உள்ளது பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

மானியக் கோரிக்கை அறிவிப்புகளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள கோவில்கள் விபரம்:

l ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவிற்குட்பட்ட, வல்லக்கோட்டை சுப்ரமணியசுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில், 2 கோடி ரூபாய் மதிப்பில், பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்படும்

l காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், 25 கோடி ரூபாய் மதிப்பில், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு புனரமைப்பு பணிகள் செய்யப்படும்

l ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவிற்குட்பட்ட, செரப்பனஞ்சேரியில் உள்ள வீமீசுவரர் கோவில், 7 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு புனரமைக்கப்படும்

l ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவிற்குட்பட்ட, பென்னலுார் அகத்தீஸ்வரர் கோவில், 2 கோடி ரூபாய் மதிப்பில், திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்

l ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவிற்குட்பட்ட, சிறுவாச்சூர் திருவாலீஸ்வரர் கோவிலில், 2 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்

l காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான கீழ்ப்பாக்கம் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில், 11.15 கோடி ரூபாய் மதிப்பில், கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்படும்

l ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவிற்குட்பட்ட, வல்லக்கோட்டை சுப்ரமணியசுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில், 2 கோடி ரூபாய் மதிப்பில், புதிய திருமண மண்டபம் கட்டப்படும்

l தமிழகத்தில் 53 கோவில்களில் உள்ள திருத்தேர்களுக்கு 10.25 கோடி ரூபாய் மதிப்பில், பாதுகாப்பு கொட்டகை அமைக்கப்படும். இந்த 53 கோவில்களில், காஞ்சிபுரம் நகரில் உள்ள கச்சபேஸ்வரர் கோவிலும் ஒன்றாகும்

l தமிழகத்தில் 32 கோவில்களில் உள்ள திருக்குளங்கள், 10.04 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், காஞ்சிபுரம் மாவட்டம், வடக்குப்பட்டு சுந்தரவரதராஜ பெருமாள் கோவிலின் குளமும், காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்ரமணியசுவாமி கோவில்களின் குளமும் சீரமைக்கப்படவுள்ளன.

lதமிழகத்தில் 1000 ஆண்டுகள் பழமையான, 40 கோவில்கள், 21 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், காஞ்சிபுரம் மாவட்டம், திருப்புலிவனம் வியாக்ரபுரீஸ்வரர் கோவில் திருப்பணி மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிவராத்திரி பெருவிழா ஏமாற்றம்: தமிழகத்தில் கடந்த சிவராத்தி தினத்தில், பேரூர் பட்டீஸ்வரர், திருநெல்வேலி நெல்லையப்பர், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர், தஞ்சை பிரகதீஸ்வரர், மயிலை கபாலீஸ்வரர் கோவில் ஆகிய ஐந்து கோவில்களில், அரசு சார்பில் சிவராத்திரி பெருவிழா கொண்டாடப்பட்டது. அமைச்சர் சேகர்பாபு, மானியக் கோரிக்கை அறிவிப்பில், ஸ்ரீரங்கம் ஜெம்புகேஸ்வரர் கோவிலிலும், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலிலும் நடப்பாண்டு சிவராத்திரி பெருவிழா விமரிசையாக கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார். கோவில்கள் நிறைந்த காஞ்சிபுரத்தில் இந்தாண்டு சிவராத்தி பெருவிழா அரசு சார்பில் கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுவும், 100க்கும் மேற்பட்ட சிவாலயங்கள் உள்ள காஞ்சிபுரத்தில் சிவராத்திரி பெருவிழா அறிவிக்கப்படாதது, காஞ்சிபுரம் மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.@@block@@

20 கோவில்களில் திருப்பணிகள்: தமிழகத்தில் 698 கோவில்கள், 250 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர் சுந்தரவரதராஜ பெருமாள் கோவில், குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில், சாத்தனஞ்சேரி கரியமாணிக்க பெருமாள் கோவில், ஐயங்கார்குளம் சஞ்சீவராயர் கோவில், பொற்பந்தல் கிராமம் அனுமீஸ்வரர் கோவில், மாகரல் கிராமத்தில் மாகறலீஸ்வரர் கோவில், கோவிந்தவாடி கிராமம் கைலாசநாதர் மற்றும் தட்சிணாமூர்த்தி கோவில், கருவேப்பம்பூண்டி விஸ்வநாதர் கோவில்.காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்ரமணியசுவாமி கோவில், கோவூர் சுந்தரேஸ்வரர் சுவாமி கோவில், குன்றத்துார் திருஊரக பெருமாள் கோவில், காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை ஓணகாந்தீஸ்வரர் கோவில், வாலாஜாபாத் அருகே பாவாசாகிப்பேட்டை மண்டலேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் பணாமுடீஸ்வரர் கோவில்.குன்றத்துார் சேக்கிழார் சுவாமி கோவில், இளையனார்வேலுார் பாலசுப்ரமணியசுவாமி கோவில், திருநாகேச்சரசுவாமி கோவிலின் உபகோவிலான குன்றத்துார் தேவி பொன்னியம்மன் கோவில், பெரிய காஞ்சிபுரம் அமரேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் கிழக்கு ராஜவீதி நகரீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் அய்யனாரப்பன் கோவில் ஆகிய 20 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !